புத்ரா ஜெயா, ஜனவரி 16 – நீண்டு கொண்டே மஇகா மறு தேர்தல் விவகாரத்தில் மற்றொரு திருப்புமுனையாக, முன்னாள் மஇகா தேசியப் பொருளாளர் டத்தோ ஆர்.ரமணனும், முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் புதிய புகார் ஒன்றை நேற்று இங்குள்ள சங்கப் பதிவகத்தில் சமர்ப்பித்தனர்.
தேர்தல் நடைபெற்ற 2013ஆம் ஆண்டில் எட்டு மஇகா தொகுதிகளில் சட்டவிரோதமாக ஏறத்தாழ 800 கிளைகள் அமைக்கப்பட்டன என்பதற்கான ஆதாரங்களுடன் புகார் ஒன்றை சங்கப் பதிவகத்தில் சமர்ப்பித்த, விக்னேஸ்வரனும், ரமணனும் இது தொடர்பான விசாரணையை சங்கப் பதிவதிகாரி மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்
தேர்தல் நடைபெறும் ஆண்டில், மஇகாவில் புதிய கிளைகள் அமைக்கப்படக் கூடாது என மஇகாவின் சட்டவிதிகள் குறிப்பிடுகின்றன.
ஒரு கறுப்புப் பெட்டி நிறைய ஆவணங்கள், சம்பந்தப்பட்ட தொகுதிகளில் இருந்து புகார் கடிதங்கள் ஆகியவற்றுடன் அவர்கள் சங்கப் பதிவதிகாரியைச் சந்தித்தனர்.
சங்கப் பதிவதிகாரியைச் சந்தித்த பின்னர், சங்கப் பதிவக அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய விக்னேஸ்வரனும், ரமணனும், அந்த எட்டு தொகுதிகள், சிப்பாங், சுபாங், உலு சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா செலாத்தான், சிரம்பான், கோலலங்காட், செர்டாங் எனப் பெயர் குறிப்பிட்டனர்.
டத்தோ ஆர்.ரமணன்
“நாங்கள் சமர்ப்பித்த ஆவணங்களின் வழி தேர்தல் நடந்த 2013ஆம் ஆண்டில் மஇகா கிளைகள் அமைக்கப்பட்டன என்பதற்கும், அந்த கிளைகள் அமைப்பதில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என்பதற்குமான ஆதாரங்களையும் நாங்கள் சங்கப் பதிவகத்தில் சமர்ப்பித்துள்ளோம்” என அவர்கள் இருவரும் தெரிவித்தனர்.
ஏற்கனவே, சங்கப் பதிவகம் விடுத்த உத்தரவுப்படி மஇகாவில் இன்னும் மறுதேர்தல் நடத்தப்படாமல் விவகாரம் நீண்டு கொண்டிருக்கும் நிலையில் இந்தப் புதிய விவகாரம் புதிய திருப்பமாக முளைத்துள்ளது.
-பெர்னாமா