Home கலை உலகம் மலேசியக் கலைத்துறையின் சுவாரஸ்யத் தகவல்கள் (1)

மலேசியக் கலைத்துறையின் சுவாரஸ்யத் தகவல்கள் (1)

661
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 21 – வேகமாக வளர்ந்து வரும் மலேசியக் கலைத்துறையில் தினம் தினம் புதிய படங்களும், குறும்படங்களும் உருவாகி வருகின்றன. அதனை விட வேகமாக அப்படங்களைப் பற்றிய செய்திகளும் பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ:-

‘என் வீட்டுத் தோட்டத்தில்’ – கார்த்திக்கின் கைவண்ணம்

#TamilSchoolmychoice

En veettu thottathil 1

‘மெல்லத்திறந்தது கதவு’ படத்தின் வெற்றிற்குப் பிறகு கார்த்திக் ஷமளன் இயக்கத்தில் ‘சுகமாய் சுப்புலஷ்மி’ படம் படப்பிடிப்பு வேலைகளெல்லாம் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்குக் காத்திருக்கின்றது. இந்நிலையில் அதற்கு இடைப்பட்ட காலத்தில் புதிய திகில் படம் ஒன்றை இயக்க விரும்பிய கார்த்திக், உடனடியாக தனது ஆஸ்தான நடிகையான ஜெயா கணேசனை வைத்து ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ என்ற படத்தை இயக்கத் தொடங்கிவிட்டார்.அந்த படத்திற்காக ஒரு கலை இயக்குநரை வைத்து முதல் முறையாக வீடு வடிவமைப்பை (செட்) உருவாக்கி அதில் படப்பிடிப்பு நடத்தி வருவதாக அறிவித்துள்ளார். அத்துடன் இப்படத்தில் சமேஷன் மணிமாறன் இசையில், யுவாஜி வரிகளில் உருவான ‘ஒலி விழா’ என்ற பாடலை பிரபல சினிமா பின்னணிப் பாடகர் பிரசன்னா பாடியுள்ளார்.

உன் போல் யாரும் இல்லை – பிரகாஷ்

Perakas

பெரிய ஆடம்பரம் இருக்காது… என்ன செய்கிறார் என்று வெளியுலகிற்கே தெரியாது… பேட்டி என்றால் யோசிப்பார்… ஆனால் சத்தமின்றி தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டதாக அறிவித்துள்ளார் ‘வெண்ணிற இரவுகள்’ இயக்குநர் பிரகாஷ் ராஜாராம். தீபாவளிக்கு தனது அபிமான நட்சத்திரங்களை வைத்து ‘உன் போல் யாருமில்லை’ என்ற தொலைக்காட்சி படத்தை இயக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவரின் அடுத்த படைப்பு என்னவாக இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.

‘சூட்டிங் ஸ்டார்’ – புதிய நட்சத்திரம் அறிமுகம்

VJ

மலேசிய இந்திய கலைஞர்கள் இயக்கத்தின் தலைவரும், பாடகருமான விஜய் எமர்ஜென்சி சுடச் சுடச் புதிய தகவல் ஒன்றை இன்று தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். யுனிவெர்சல் மலேசியன் ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘சூட்டிங் ஸ்டார்’ என்ற புதிய தனிப்பாடல் ஒன்றை வரும் பிப்ரவரி 11-ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

சாய் எப்எம் – இது புதுசு கண்ணா… புதுசு….

Sai FM

வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், புத்தகச் சிறகுகள் அமைப்பின் நிறுவனர் எனப் பண்முகங்களைக் கொண்டவரான தயாஜி வெள்ளைரோஜா, தற்போது தனது நண்பர் சாயுடன் இணைந்து சாய் எப்எம் என்ற புதிய இணைய வானொலி ஒன்றை உருவாக்கி அதன் வழி மீண்டும் அறிவிப்பாளராகக் களமிறங்கியுள்ளார்.

இது தவிர, “எனது முதல் புத்தகத்துக்கான வேலையினை தொடங்கியுள்ளேன்….சிறுகதை? நாவல்? கட்டுரை? பத்தி? அனுபவம்? சொல்கிறேன்” என்றும் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குருவின் மறைவும் சிஷ்யனின் சோகமும்

1395413_887251151299591_4859409553704138718_n

அண்மையில் உடல்நலக்குறைவால் காலமான இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் குறித்து தமிழ்த்திரையுலகமே சோகத்தைக் கொட்டித் தீர்க்க, அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ரஜினி, கமல், பிரகாஷ்ராஜ் உட்பல பல முன்னணி நட்சத்திரங்கள் கண்ணீர் விட்டனர்.

அதேபோல், நமது மலேசியக் கலைத்துறையிலும் பாலச்சந்தருடன் மிகவும் நெருங்கிப் பழகியவரும், அவரை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவருமான இயக்குநருமான எஸ்.டி.பாலா, கடந்த மாதம் டிசம்பர் 30-ம் தேதி சோமா அரங்கத்தில் இரங்கல் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து தனது குருவான பாலச்சந்தருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 – ஃபீனிக்ஸ்தாசன்