கோலாலம்பூர், ஜனவரி 26 – சாம்சுங் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியை அந்நிறுவனம் எதிர்வரும் மார்ச் 2-ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது.
கடந்த வருடத்தில் சற்றே வர்த்தக சரிவை சந்தித்த சாம்சுங், தனது போட்டியாளர்களுக்கு பதிலடி தரும் விதமாக தனது புதிய தயாரிப்பான ‘கேலக்ஸி எஸ் 6’ (Galaxy S6) திறன்பேசிகளை மார்ச் மாதம் 2-ஆம் தேதி நடக்கவிருக்கும் அனைத்துலக செல்பேசி மாநாட்டில் (Mobile World Congress) அறிவிக்க இருக்கிறது.
இது தொடர்பான அறிவிப்புகளை அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகி சோசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். சாம்சுங் நிறுவனத்திற்கு கடும் போட்டி அளிக்கும் வகையில்,
ஆப்பிள் மற்றும் சியாவுமி நிறுவனங்கள், அதி நவீன திறன்பேசிகளை அறிமுகப்படுத்தி வருவதால் சாம்சுங், சீனா, இந்தியா உள்ளிட்ட வர்த்தக சந்தைகளில் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக சாம்சுங், கேலக்ஸி எஸ் 6-ஐ புதுமையாக வடிவமைக்க பல்வேறு முன்மாதிரிகளை வடிவமைத்துள்ளதாகவும், பல்வேறு நிபுணர்களின் ஆலோசனைக்குப் பிறகு அதில் ஒன்றிற்கு இறுதி வடிவம் கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எஸ் 6-ல் ‘ப்ராசஸ்சர்’ (Processor)-ஐ உறுதி செய்வதிலும் சாம்சுங்கிடம் குழப்பமான மனநிலை நீடிப்பதாக கூறப்படுகிறது. S 6 திறன்பேசிகளில் Exynos அல்லது Qualcomm’s Snapdragon 810 CPU ப்ராசஸ்சரை மேம்படுத்த சாம்சுங் ஆலோசனை செய்து வருவதாக தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Exynos ப்ராசஸ்சர் 4ஜி தொழில்நுட்பத்திற்கு ஏற்றதாக இல்லாததால், Snapdragon 810-ஐ உறுதி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் ஸ்னாப்ட்ராகன் 4ஜி தொழில்நுட்பத்தில் அதி வேகமாக செயல்படும்.
Exynos, சாம்சுங் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பு என்பதால், இலாபகரமானதாக இருக்கும் என்றாலும், 4ஜி பெரிய அளவில் அறிமுகமாகாத இந்திய சந்தைகளில் மட்டுமே அதிக வரவேற்பை பெறுவதற்கு வாய்ப்புள்ளது.
எவ்வாறாயினும், கடந்த நிதியாண்டில் தங்கள் நிறுவனம் இழந்த வர்த்தகத்தை மீட்க, சாம்சுங் பல்வேறு முயற்சிகளை எடுக்கும் என்பது நிச்சயம்.
ஆனால், சாம்சுங் தனது திறன்பேசியினை அறிமுகப்படுத்த இருக்கும் அந்த கால கட்டத்தில், ‘எச்டிசி’ (HTC) மற்றும் ‘சோனி’ (Sony) நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த இருப்பதால், போட்டி பலம் மிக்க தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.