புதுடெல்லி, ஜனவரி 26 – ஒபாமாவுடனான நட்பு பற்றி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பல சுவாரஸ்யமான தகவல்களைப் பத்திரிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர், நானும் பாரக்கும் உருவாக்கி உள்ள நட்பு, எங்கள் இரு தேசங்களையும் இணைத்துள்ளது என்று பெருமிதம் பொங்க தெரிவித்தார்.
நேற்று இந்தியாவிற்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு, மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியப் பிரதமர் மோடி அவரை ஆரத்தழுவி வரவேற்றார்.
இந்நிலையில் இரு நாட்டு தலைவர்களும் இணைந்து பத்திரிக்கையாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது இந்தியப் பிரதமர் மோடி, ஒபாமாவை, பராக் என்ற அவரின் முதல் பெயரைக் கூறியே அழைத்தார்.
அவர்களின் நட்பு பற்றி மோடி கூறியதாவது:-“நானும், பராக்கும் உருவாக்கி உள்ள நட்பு, எங்கள் இரு தேசங்களையும் இணைத்துள்ளது. எங்கள் மக்களை இணைத்துள்ளது. நாங்கள் தொலைபேசியில் பேசிக் கொள்ளும் போதெல்லாம், நகைச்சுவைகளை பரிமாறிக் கொள்வோம்”.
“இந்த மனநிலை தான் பராக்குடனான எனது நட்பை அதிகரிக்கச் செய்தது. இரு நாடுகளின் உறவில் தற்போது எந்தவொரு தடையும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
மோடி, தன்னை பராக் என்று அழைப்பதை ரசித்த ஒபாமா, தங்கள் நட்பு பற்றி மோடி கூறியதை ஆமோத்தித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- “மோடி கூறியவை அனைத்தும் எப்போதும் மாறாத ஒன்று. எங்கள் மனநிலை தான் எங்கள் நாட்டு மக்களின் மன நிலை”.
“எங்களின் நட்பு, இரு நாடுகளின் மக்களை இணைத்துள்ளது. நாங்கள் இருவரும் எங்கள் உறக்கத்திற்கான நேரங்களை ஒப்பிட்டுக் கொள்வோம். அவர் என்னை விட குறைவான நேரங்களே உறங்குகிறார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.