பெய்ஜிங், ஜனவரி 26 – தொழில்நுட்ப நிறுவனங்களின் தயாரிப்புகளை மதிப்பிடுவதற்கும் ஆராய்வதற்கும் அனைத்துலக நாடுகள் ஏற்றுக் கொண்ட விதிகள் மற்றும் நடைமுறைகள் உள்ளன.
எனினும், சீனாவில், உலக நிறுவனங்கள் குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வர்த்தகம் செய்வதற்கு சீன அரசு பல்வேறு சட்ட திட்டங்களை விதித்துள்ளது.
இதனை ஏற்றுக் கொள்ள மறுத்ததால், பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு சீனா அரசு தடை விதித்துள்ளது.
தங்கள் நாட்டை உளவு பார்ப்பதற்காக அமெரிக்கா போன்ற நாடுகள் இதுபோன்ற தொழில்நுட்ப தயாரிப்புகளை பயன்படுத்துவதாக சீன அரசு தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், ஆப்பிள் தனது தயாரிப்புகளை சீன அரசின் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சீனாவின் சைபர் ஸ்பேஸ் நிர்வாகத்தின் பரிசோதனைகளுக்கு ஒப்புக் கொண்ட முதல் அமெரிக்க நிறுவனம் ஆப்பிள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற அமெரிக்க நிறுவனங்கள் சீனாவின் கெடுபிடி சோதனைகளுக்கு ஒப்புக் கொள்ளாத போது, ஆப்பிள் மட்டும் உடன்படுவதற்கான காரணம், சீனாவில் ஆப்பிளின் வர்த்தகம் அமெரிக்காவை விட மிகப் பெரியது.
2012-ம் ஆண்டுவரை சீனாவில் ஆப்பிளின் வர்த்தகத்திற்கு பெரிய அளவில் போட்டி அளிக்கும் நிறுவனங்கள் உருவாகவில்லை. எனினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் சியாவுமி சீனாவில் மட்டுமல்லாது ஆசிய சந்தைகளிலும் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது.
சீனா அரசும், ஆப்பிளுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில், சியாவுமிக்கு பல்வேறு வகையில் ஆதரவு அளித்து வருகின்றது. இந்த நிலையில், சீன வர்த்தகத்தை இழந்து விடக் கூடாது என நினைத்துள்ள ஆப்பிள், பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்த பரிசோதனையில் ஆப்பிளின் தொழில்நுட்ப கருவிகள், மென்பொருட்கள் மற்றும் செயலிகள் என அனைத்தும் ஆராயப்படும். இது தொடர்பாக சீனாவின் சைபர் ஸ்பேஸ் நிர்வாகத்தின் துணை இயக்குனர் பெங் போ கூறுகையில்,
“நாங்கள் எப்போதும் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் சட்ட திட்டங்களை உருவாக்கி வருகின்றோம். அவை அனைத்தும் நாட்டிற்கு பயன் அளிப்பதாகவே உள்ளன”.
“ஆப்பிள் உடன்பட்டுள்ள இந்த பரிசோதனை முயற்சிகள் அந்நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு நேர்மறையான சூழலை உருவாக்குவதாக அமையும்” என்று அவர் கூறியுள்ளார்.