ஈப்போ, ஜனவரி 26 – மஇகாவில் நிலவி வரும் பிரச்சினைகள் தொடர்பில் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தை சந்தித்துப் பேசுவதை சில மூன்றாம் தரப்பினர் தடுத்து வருவதாக மஇகா உதவித் தலைவர் டத்தோ சரவணன் குற்றம் சாட்டி உள்ளார்.
அந்த மூன்றாம் தரப்பினர் யாரென்பது தமக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடத் தாம் விரும்பவில்லை என்றார் அவர்.
துணைத் தலைவரைச் சந்திக்க விடாமல் டத்தோ பழனிவேலை தடுக்கும் அந்த மூன்றாம் தரப்புக்கு இது தொடர்பில் தனிப்பட்ட சுயநல நோக்கங்கள் உள்ளதாகவும் சரவணன் சாடினார்.
“டத்தோஸ்ரீ பழனிவேல் சங்கப் பதிவதிகாரியின் உத்தரவை எதிர்ப்பார் என நான் கருதவில்லை. ஒருவேளை அப்படியொரு நிலை ஏற்பட்டால், அதற்கு சில மூன்றாம் தரப்பினரின் தூண்டுதலே காரணமாக இருக்க முடியும். எனக்கு அவர்களுடைய பெயர்கள் தெரியும். ஆனால் குறிப்பிட விரும்பவில்லை. அனைத்திற்கும் பின்னால் ஒரு முக்கிய நபர் மூளையாக (மாஸ்டர் மைண்ட்) செயல்பட்டு உள்ளார்,” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் சரவணன்.
தற்போது நிலவி வரும் பிரச்சினைகள் தொடர்பில் கட்சியின் தேசியத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் தொகுதி தலைவர்கள் அனைவரும் ஒரே குழுவாக இணைந்து செயல்பட்டு தீர்வு காண வேண்டிய தருணம் இது என்று அவர் மேலும் கூறினார்.