டெல்லி, ஜனவரி 26 – மத்திய அரசு 2015-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. இதில் மூத்த பாஜக தலைவர் அத்வானி, நடிகர் அமிதாப் பச்சன் உள்பட 9 பேருக்கு பத்ம விபூஷண் விருது அளிக்கப்படுகிறது.
முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷண் தரப்படவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. ஆனால் அவரது பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை.
எங்களுக்கு பத்ம விருது வேண்டாம் பாபா ராம்தேவ், ரவிசங்கர்:
இந்நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் ஆன்மிக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் தங்களுக்கு பத்ம விருது வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.
பத்ம விருது பரிசீலனையில், யோகா குரு பாபா ராம்தேவின் பெயரும் இருந்ததற்கு, காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் ராம்தேவ், ‘தனக்கு பத்ம விருது வேண்டாம்’ என அறிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவர் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், “எனக்கு பத்மவிபூஷன் விருது தர மத்திய அரசு விரும்புவதாக அறிந்தேன். அதற்காக நன்றிக்கடன் பட்டுள்ளேன்”.
“ஆனால் நான் ஒரு சன்னியாசி. எனது சன்னியாச தர்மத்திற்கு முழுமையாக பணியைத் தொடர விரும்புகிறேன். எனவே இந்த விருதை நன்றியுடன் மறுக்க நான் கடமைப்பட்டுள்ளேன். இதை வேறொரு சிறந்த நபருக்குத் தருமாறும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் ராம்தேவ்.
யோகா குரு பாபா ராம்தேவை தொடர்ந்து பத்ம விருதை ஏற்க ஆன்மிக குரு ஸ்ரீ ரவிசங்கரும் மறுத்து விட்டார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது:
“விருதுக்கு எனது பெயரை பரிசீலனை செய்ததற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த பெருமையை வெறோருவருக்கு வழங்க வேண்டும்”.
“ராஜ்நாத் சிங் என்னை அழைத்து விருது குறித்துக் குறிப்பிட்டார். அரசுக்கு அதற்காக நன்றி கூறிக் கொள்கிறேன். என்னை விட சிறந்தவர்கள் பலர் உள்ளனர்” என்றார் அவர்.