புதுடில்லி – இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய அதிபர் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளை வழங்கி கௌரவிப்பது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு பரத நாட்டியம், ஒடிசி நடனங்கள் மற்றும் கலைத் துறையில் இணையில்லா சேவையாற்றி உலகப் புகழ் பெற்றிருக்கும் மலேசியாவின் மலாய் கலைஞர் ரம்லி இப்ராகிமுக்கு “பத்மஸ்ரீ” விருது வழங்கப்படுகிறது.
ரம்லி இப்ராகிம் அறிமுகம் தேவையில்லாத ஒரு கலைஞராவார். பரத நாட்டியம் மற்ற வகை இந்திய நடனவகைகளில் அவர் ஆற்றியிருக்கும் பணி அளப்பரியதாகும்.
அதிலும், பிரதமர் நஜிப் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் இந்த தருணத்தில் மலேசியாவின் நடனக் கலைஞர் ரம்லி இப்ராகிமுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவது மலேசியாவுக்குக் கிடைத்த கௌரவமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய அதிபரால் வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருது பாரத ரத்னா விருதாகும்.
அடுத்து பத்ம விருதுகள் மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகின்றன.
பாரத ரத்னாவுக்கு அடுத்த இரண்டாவது பெரிய உயரிய விருது பத்மவிபூஷண் ஆகும். இந்த ஆண்டு மூவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அதில் இசையமைப்பாளர் இளையராஜாவும் ஒருவர்.
இரண்டாவது உயரிய பத்ம விருது பத்ம்பூஷண். மூன்றாவது உயரிய விருதான பத்மஸ்ரீ பல்வேறு துறைகளில் சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அந்த வரிசையில் இந்த ஆண்டு கலைத்துறை சேவைக்காக மலேசியாவின் ரம்லி இப்ராகிம் பத்மஸ்ரீ பெறுகிறார்.
இந்த ஆண்டு மொத்தம் 85 பேர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.