பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 27 – சிலாங்கூர் மாநில மஇகா செயலாளர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டதை கே.ஆர்.பார்த்திபன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆர்ஓஎஸ் விவகாரத்தில் விரைவில் ஒரு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக துணைத்தலைவருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தான் குரல் கொடுத்தததால் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக மஇகா சிலாங்கூர் மாநில செயலாளர் கே.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பார்த்திபன் தி மலாய் மெயில் செய்தி இணையத் தளத்திடம் கூறுகையில், “ஆமாம்… எனது பதவி நீக்கம் குறித்து தலைவரிடமிருந்து குறுந்தகவல் கிடைத்தது. மஇகா-வின் நிலை குறித்தும், இந்திய சமுதாயத்தின் எதிர்காலம் குறித்தும் பொதுவில் பேசியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சி ஒன்றுபடவும், பொதுத்தேர்தலில் இந்திய சமுதாயம் வெற்றியடையவும், இந்த பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணும் நோக்கில் தான் நான் பேசினேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (ஜனவரி 24) மஇகா தேசிய துணைத்தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற கூட்டம் சட்டவிரோதமானது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “என் அனுமதியின்றி இக்கூட்டம் நடைபெற்றுள்ளது. கட்சியின் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு இந்த கூட்டம் சட்டவிரோதமாக நடந்துள்ளது. எனவே சட்டவிரோதமாக நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளோ அல்லது பிரச்சனைக்கான தீர்வுகளோ சட்டப்படி செல்லாது மற்றும் அதற்கு எந்த ஒரு விளைவும் இல்லை.”
“இக்கூட்டத்தை நடத்தியவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து சிந்தித்து வருகின்றேன்” என்று பழனிவேல் குறிப்பிட்டுள்ளார்.