கோலாலம்பூர், ஜனவரி 27 – எரிபொருளுக்கான கூடுதல் கட்டணத்தை ரத்து செய்வதாக ஏர் ஆசியா நிறுவனம் அறிவித்துள்ளது.
அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவதை அடுத்து அந்நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளது.
மலேசியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் ஏர் ஆசியா நிறுவனங்களுக்கும் இம்முடிவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஏர் ஆசியா எக்ஸ், தாய் ஏர் ஆசியா எக்ஸ், இந்தோனேசியா ஏர் ஆசியா எக்ஸ் ஆகியவையும் எரிபொருளுக்கான கூடுதல் கட்டணத்தை ரத்து செய்துள்ளன.
சுற்றுலாத்துறை மிக சிறப்பாக செயல்படும் என்பதால் ஏர் ஆசியாவின் இந்நடவடிக்கை பயனீட்டாளர்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் கூடுதல் பலம் சேர்க்கும் என அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டோனி ஃபெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
“கடந்த ஆண்டு நவம்பர் மாதமே இம்முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. எனினும் இப்போது தான் செயல்படுத்த முடிந்தது. இதன் மூலம் பயணக் கட்டணம் கணிசமாகக் குறையும் என்பதால் சுற்றுலாத்துறைக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும்,” என டோனி ஃபெர்னாண்டஸ் மேலும் கூறியுள்ளார்.