இவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில்; “பொதுஜனம் என்ற கதாபாத்திரத்தை தேசத்தின் அடையாளமாக மாற்றிய ஓர் அறிவாளியை இந்தியா இழந்து விட்டது. ஆர்.கே.லட்சுமணின் கேலிச் சித்திரங்களுக்கு ரசிகன் என்ற முறையில், அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு” எனக் கூறினார்.
நரேந்திர மோடி கூறுகையில்: “இந்தியர்களின் வாழ்விலும், முகத்திலும் கேலிச் சித்திரங்கள் வாயிலாக புன்னகையைக் கொண்டு வந்த ஆர்.கே.லட்சுமணுக்கு தேசம் கடமைப்பட்டுள்ளது”.
“மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ள அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவரது குடும்பத்தாருக்கும், அவரது எண்ணற்ற நல விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி: “வியக்கத்தக்க நகைச்சுவைச் சித்திரங்களாலும், கூர்மையான கருத்துகளாலும் லட்சக்கணக்கான பொதுஜனங்களின் வாழ்க்கையைத் தொட்டவர் ஆர்.கே.லட்சுமண். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறுகையில்: “பொதுஜனம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒரு தலைமுறைக்கும் மேலாக இந்தியாவின் நிலையைச் சுட்டிக்காட்டியவர் லட்சுமண். பெரும்பாலான மக்களுக்கு அவர் ஓர் உந்துசக்தியாக விளங்குகிறார்”.