ஸ்ரீரங்கம், ஜனவரி 27 – ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். மேலும், இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெறவுள்ள ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் சீ. வளர்மதி (அதிமுக), எஸ். ஆனந்த் (திமுக), எம். சுப்பிரமணியம் (பாஜக), க. அண்ணாதுரை (மார்க்சிஸ்ட்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தமாகா, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடப் போவதில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்துள்ளன.
இந்த நிலையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது; “ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றும், யாருக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் இடைத்தேர்தல் என்பது ஜனநாயக முறையில் நடப்பதில்லை”.
“கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக அளவு பணப்புழக்கம் இருந்ததாகவும், தேர்தல் ஆணையத்தால் அதை தடுக்க முடியவில்லை என்றும் ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தெரிவித்துள்ளார்.”
“பொதுத் தேர்தலிலேயே பணப்புழக்கத்தை தடுக்க முடியவில்லை என்றால், இடைத்தேர்தல் எப்படி நடக்கும் என்பதை அனைவரும் அறிவார்கள். தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை”.
“பண நாயகத்தை நம்பி நடக்கும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு எங்களின் உழைப்பையும், நேரத்தையும் வீணாக்க விரும்பவில்லை”.
“போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் பணத்தை வாரி இறைக்கப் போவதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்தத் தேர்தலில் போட்டியிட்டு எங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்ள விரும்பவில்லை” என்றார் இளங்கோவன்.