பெய்ஜிங், ஜனவரி 27 – இந்தியா-சீனா இடையே நிரந்தரப் பகையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் திட்டமாக உள்ளது. ஆசிய நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக அமெரிக்கா விரித்துள்ள வலையில், இந்தியா சிக்கி விட வேண்டாம் என்று சீன பத்திரிக்கைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்திய குடியரசு தின விழாவில், நரேந்திர மோடி மற்றும் ஒபாமாவின் நெருக்கம் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதன் காரணமாக அனைத்துலக அளவில் அனைவரின் கவனமும் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவுடனான நெருக்கம் பற்றி சீனப் பத்திரிகைகள் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள பிரிவினைகளை பயன்படுத்தி நிரந்தர பகையை ஏற்படுத்த அமெரிக்கா மிகப்பெரும் சதிவலை உருவாக்கி உள்ளது”.
“இதில் இந்தியா வீழ்ந்துவிட வேண்டாம். அமெரிக்க அதிபர் ஒருவர் தனது பதவிக்காலத்தில் இரண்டாவது முறையாக இந்தியாவிற்கு வருவது இதுவே முதல் முறை. சீனாவிற்கெதிராக இந்தியாவை திசை திருப்பவே இதுபோன்ற நெருக்கத்தை அமெரிக்கா காட்டி வருகின்றது”
“சீனாவின் எழுச்சியை கட்டுப்படுத்தவும் ஆசிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை மேம்படுத்த விரும்பும் அமெரிக்கா, இந்தியாவை கூட்டாளியாக மாற்றிக்கொள்ள தனது பிடிவாதங்களை தளர்த்தி, வேறுபாடுகளை கலைந்து பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனை மேற்கத்திய நாளிதழ்கள் பலவும் சுட்டிக் காட்டி உள்ளன.”
“இந்தியா – சீனா இடையே நிலவும் மிகவும் சிக்கலான பிரச்சினைகளைக் கூட பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். இதனை இரு நாடுகளும் செயல்படுத்த முன்வர வேண்டும். இல்லையெனில் இது ஆசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளன.
சீனப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள இந்த செய்திக் குறிப்பு, அந்நாட்டு தலைவர்களின் மனப் போக்கை பிரதிபலிப்பதாகவே உள்ளது. சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும், இந்திய தலைவர்களுக்கு அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியா-சீனா உறவு பற்றி குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.