கோலாலம்பூர், ஜனவரி 27 – ‘ஐபிஎம்’ (IBM) நிறுவனம் சுமார் ஒரு லட்சம் ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அமெரிக்காவின் பிரபல வர்த்தக இதழான போர்ப்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒருவேளை இந்த செய்திக் குறிப்பு உண்மையானால், வர்த்தக உலகம் இதுவரை சந்தித்திராத மிகப் பெரும் ஊழியர்கள் பணி நீக்கம் இதுவாக இருக்கும்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனமான ஐபிஎம், உலக அளவில் கணிப்பொறி சார்ந்த பல்வேறு தயாரிப்புகளையும், சேவைகளையும் செய்து வருகிறது.
உலக அளவில் 70 கிளைகளைக் கொண்டுள்ள ஐபிஎம்-ல் சுமார் 4,30,000 பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மூலமாக அந்நிறுவனம் சுமார் 170 நாடுகளுக்கு கணினி தொடர்பான சேவைகளை செய்து வருகின்றது.
இந்நிலையில், வர்த்தக பிரச்சனைகள் காரணமாகவும், குறைந்து வரும் வர்த்தக பரிவர்த்தனைகளை மேம்படுத்தவும் மறுசீரமைப்பு நடவடிக்கையாக சுமார் 1,11,800 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக போர்ப்ஸ் இதழில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போர்ப்ஸ் இதழின் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில், “மறுசீரமைப்பு நடவடிக்கையாக 26 சதவீத ஊழியர்களை ஐபிஎம் வெளியேற்ற உள்ளது.
இதற்கு ‘ப்ராஜெக்ட் க்ரோம்’ (Project Chrome) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அடுத்த வாரமே நடைபெறலாம். ஐபிஎம் ஊழியர்கள் தங்கள் மேலாளர்களிடமிருந்து இதுதொடர்பான அழைப்புகளை எந்த சமயத்திலும் எதிர்பார்க்கலாம்”என்று கூறியுள்ளார்.
ஐபிஎம் வர்த்தகம் குறித்து ஆராய்கையில், 2010-ம் ஆண்டு வரை ஐபிஎம் வர்த்தகம் சிறப்பாகவே இருந்தது. எனினும், கடந்த மூன்று ஆண்டுகளாக, அந்நிறுவனத்தின் காலாண்டுகள், தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
2014-ம் ஆண்டின் நான்காம் காலாண்டை 2013-ன் ஒப்பிடுகையில், 11 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால், ஊழியர்கள் பணி நீக்கம், செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளது.
எனினும், ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் ஊழியர்கள் வெளியேற்றப்பட இருப்பதாக கூறப்படுவது எந்த அளவில் சாத்தியம் என்று தெரியவில்லை.
போர்ப்ஸ் இதழின் செய்தி குறித்து ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆதாரமற்ற, நம்பகத்தன்மை இல்லாத செய்திகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று தெரிவித்துள்ளது.