இந்த விவகாரம் தொடர்பில் ஹிண்ட்ராஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளது:-
“இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவில், பால் அபிஷேகம் செய்து முருகனின் அருளை நாடும் பாக்கியம் நம் முருக பக்தர்களுக்கு வாய்க்கவில்லை.
இயந்திரமே அந்த வேலையைச் செய்வதால், விரதம் இருந்தும் பால் குடம் ஏந்தியும் காவடி சுமந்தும் பால் அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள், மலை ஏறியதும் ஏதோ அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ள குடுவைப் போன்ற பெட்டியில் ஊற்ற வேண்டியதுதான்.
அதை இயந்திரத்தின் மூலம் உறிஞ்சி எடுத்துச் சென்று குகைக் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள வேல் அருகில் சற்று மேலாக அமைக்கப்பட்டுள்ள குடத்தில் அந்த இயந்திரம் கொட்டுகிறது.
அந்தக் குடத்தில் இருந்து வழியும் பால் வேலில் பட்டு கீழே வழிகிறது. இதைப் பார்த்து அத்துடன் திருப்தி அடைந்து பக்தர்கள் கீழே இறங்கிவிட வேண்டியதுதான்.
மாறாக, இருமுடிகளை வேறு எவரிடமானது கொடுத்து அனுப்புவதையோ அல்லது ஏதாவது தொங்கு வண்டி மூலமாக அனுப்புவதையோ எந்தப் பக்தரும் விரும்ப மாட்டார்கள் என்பதை பத்துமலை முருகன் கோயில் நிர்வாகத்தினர் உணரவேண்டும்.
இந்த ஆண்டு இப்படி செய்தவர்கள், அங்கு ‘கேபள் கார்’ என்னும் தொங்கு வண்டி ஏற்பாடு செய்யப்பட்டதும் அதன்வழி பாலாபிஷேகப் பாலையும் அனுப்பிவிட்டு, கீழிருந்தே அகன்ற தொலைக்காட்சித் திரையில் இயந்திரத்தின்வழி பால் கொட்டுவதைப் பார்த்துவிட்டு திரும்பிச் செல்லுங்கள் என்று சொன்னாலும் சொல்வார்கள் போலும்.
எனவே, புதுமை என்ற பெயரில் இதைப் போன்ற பிற்போக்குத்தன வேலைகளை செய்யக்கூடாது. நாகரிகம்-அறிவியல் வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தில் சமயத்தையும் சமய நடைமுறையையும் சிறுமை படுத்தக்கூடாது” –
இவ்வாறு வேதமூர்த்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.