கோலாலம்பூர்: தைப்பூசத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) பத்துமலைக்கு வரலாற்றுபூர்வ வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அங்கு ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்களுக்கு அரசாங்கம் தேவையான ஆதரவை வழங்கும் என அறிவித்தார்.
பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்திற்கு சிறப்பு வருகை மேற்கொண்ட பிரதமரை தேவஸ்தானத் தலைவர் டான்ஶ்ரீ ஆர்.நடராஜா பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றார். பிரதமர் பத்துமலை வருவது இதுவே முதன் முறையாகும்.
இந்த நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன், அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, துணையமைச்சர் டத்தோஶ்ரீ ஆர்.ரமணன், சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பராயுடு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பத்துமலைக்கு அன்வார் வருகை தர வேண்டும் என பல முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. நஜிப் துன் ரசாக் பிரதமராக இருந்த காலகட்டத்தில் அவர் தொடர்ச்சியாக பத்துமலைக்கு தைப்பூசக் கொண்டாட்டங்களின்போது வருகை தந்திருக்கிறார்.
கடந்த ஆண்டு கொண்டாட்டத்தில் அன்வார் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இறுதிநேரத்தில் கலந்து கொள்ளவில்லை. உடல்நிலை காரணமாக அவர் பத்துமலை வருகையை ரத்து செய்ய வேண்டியிருந்தது எனக் காரணம் கூறப்பட்டது.
முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கான முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்கள் குறித்து கடுமையான சர்ச்சைகள் – விவாதங்களுக்கு மத்தியில் அன்வாரின் இன்றைய வருகை அமைகிறது.