புதுடெல்லி, ஜனவரி 27 – மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவிலும், மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
ஒபாமாவின் இந்திய வருகையின்போது, பிரதமர் நரேந்திரமோடி வித்தியாசமான உடைகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து அசத்தினார். இந்திய குடியரசு தினவிழாவில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் டெல்லி வந்தார்.
அவரை வரவேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு சென்றார். விமானத்தில் இருந்து இறங்கிய ஒபாமாவை மோடி கட்டித் தழுவியும், கை குலுக்கியும் வரவேற்றார்.
ஒபாமாவுடன் வந்த அவரது மனைவி மிச்செல்லையும் மோடி வரவேற்றார். ஒபாமாவை வரவேற்க பராம்பரிய உடையான பைஜாமாவில் சென்றார்.
அப்போது பிரதமர் மோடி வெளிர் தங்க நிற ஆடை மற்றும் காவி நிறத்தில் மேல்துண்டு என அனைவரது பார்வையும் ஈர்த்தார். அவரது ஆடை ஒபாமாவையும் விடவில்லை.
அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பிரதமர் மோடியின் ஆடையால் கவரப்பட்டார். பின்னர் மதியம் 12;50 மணி அளவில் அங்கிருந்து ‘பீஸ்ட்’ கார் மூலம் ஒபாமா அங்கிருந்து அதிபர் மாளிகைக்கு சென்றார்.
அங்கு ஒபாமாவை அதிபர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி இருவரும் உற்சாகத்துடன் வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடி கத்தரிபூ நிற பந்த்கலா கோட் என்ற உயர்ரக கோட், சூட் ஆடை அணிந்திருந்தார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் அங்குள்ள ஐதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். பிரதமர் மோடி அணிந்திருந்த கோட்டில், தங்க நிறத்தில் ‘நரேந்திர தாமோதர்தாஸ் மோடி’ என்று அவரது பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
இரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விருந்தில் வெள்ளை நிற கோட் அணிந்திருந்தார். இது அனைவரையும் கவர்ந்தது. சிறந்த உடையலங்காரத்துக்கு புகழ்பெற்ற பிரதமர் மோடி, நேற்றும் தனது உடை மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
பாரம்பரிய பந்த்கலா ரக உடையணிந்து வந்த மோடி, தலையில் ராஜஸ்தான் தர்பன் எனப்படும் தலைப்பாகை அணிந்திருந்தார். மோடியின் இந்த உடை அனைவரின் பாராட்டையும் பெற்றது.
முன்னதாக கடந்த ஆண்டு நடந்த சுதந்திர தின விழாவிலும், தலைப்பாகையுடன் மோடி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் நேற்று காலையில் லேசான மழை பெய்ததால், அமெரிக்க அதிபர் ஒபாமா தனது உடைக்கு மேலே கோட் அணிந்திருந்தார். மிச்செல் ஒபாமாவும் நீளமான கருப்பு நிற கோட் அணிந்து விழாவில் கலந்து கொண்டார்.
நேற்று மாலை பிரதமர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தனது வழக்கமான உடை அணிந்திருந்தார். பிரதமர் மோடியின் உடைகள், காண்போரை வெகுவாக கவர்ந்தது. பிரதமர் மோடியின் இந்த உடைகள் அனைத்தும் ஒபாமாவை வெகுவாக கவர்ந்தத குறிப்பிடத்தக்கது.