கோலாலம்பூர், பிப்ரவரி 1 – “மைக்கி” எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கங்களின் தேசிய சம்மேளனத்தின் நிர்வாகிகள் அனைவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தேர்தல் வழி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வசதியாகவே அனைவரும் பதவி விலகி இருப்பதாகத் தெரிகிறது.
பிரபல தொழிலதிபரும், இந்த சம்மேளனத்தின் தலைவருமான டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் (படம்) உட்பட அனைத்து நிர்வாகிகளும் பதவி விலகி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இந்த சம்மேளனத்தின் நிர்வாக மன்ற உறுப்பினர் ஒருவரை ‘செல்லியல்’ சார்பாக தொடர்பு கொண்டபோது, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிர்வாக மன்றக் கூட்டம் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
“தேர்தல் நடத்தும் வரை, சில முக்கிய பணிகளை மேற்கொள்ள 5 உறுப்பினர்களைக் கொண்ட இடைக்கால குழு அமைக்கப்பட்டுள்ளது. மார்ச் இறுதியில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வது இக்குழுவின் முக்கியமான பணிகளில் ஒன்றாக இருக்கும்,” எனப் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நிர்வாக உறுப்பினர் தெரிவித்தார்.
முன்னதாக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் சம்மேளனத் தலைவர் கென்னத் ஈஸ்வரன் பதவியிலிருந்து விலக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறு என்றும், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வசதியாகவே நடப்பு நிர்வாகிகளில் முக்கியமானவர்கள் பதவி விலகி இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து நிர்வாக மன்ற உறுப்பினர்களில் ஒருவரான பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த வணிகர் வசந்தராஜனைத் தொடர்பு கொண்டபோது, “முக்கிய நிர்வாகிகள் பதவி விலகியது உண்மைதான். இடைக்கால குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் நானும் ஓர் உறுப்பினர். மற்ற விவகாரங்கள் அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும். மேற்கொண்டு ஏதும் சொல்வதற்கில்லை,” என்றார்.