Home நாடு சிங்கை அரசின் தமிழ் மொழித் திட்டங்கள் – ஆழமான உரையால் கவர்ந்த அமைச்சர் இந்திராணி ராஜா!

சிங்கை அரசின் தமிழ் மொழித் திட்டங்கள் – ஆழமான உரையால் கவர்ந்த அமைச்சர் இந்திராணி ராஜா!

837
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 1 –  கோலாலம்பூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய சிங்கப்பூரின் மூத்த சட்ட மற்றும் கல்வித் துறை அமைச்சர் இந்திராணி ராஜா தனது கச்சிதமான ஆனால் அதே சமயத்தில் ஆழமான கருத்துகள் பொதிந்திருந்த உரையால் பேராளர்கள் அனைவரையும் கவர்ந்தார்.

மாநாட்டுத் தொடக்க விழாவின் போது பிரதமர் நஜிப் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த இந்திராணி ராஜா தங்கு  தடையில்லாத, தெளிவான ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

Indrani Rajah

#TamilSchoolmychoice

மாநாட்டுத் தொடக்க விழாவில் உரையாற்றும் சிங்கை அமைச்சர் இந்திராணி ராஜா

சிங்கை அரசு மேற்கொண்ட இரண்டு ஆய்வுகளின் வழி மாணவர்கள் 8 வயதுக்குள்ளாக தாய்மொழியிலும், ஆங்கிலத்திலும் கல்வி கற்கும்போது அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உறுதிப்பட்டதைத் தொடர்ந்து, தாய்மொழிக் கல்விக்கு சிங்கப்பூர் தொடர்ந்து முக்கியத்துவம் வழங்கி வருவதாக இந்திராணி ராஜா தெரிவித்தார்.

வகுப்புகளில் மாணவர்களுக்கு தமிழை போதிப்பதில் சிறப்பான திட்டங்களையும் தமது அரசு வகுத்துள்ளதையும் அவர் அறிவித்தார்.

தமிழ் முரசு பத்திரிக்கையின் விற்பனை உயர்ந்தது

“தமிழைத் தாய்மொழியாக படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை வரைந்து செயல்படுத்தும் எங்களின் அரசாங்க முயற்சிகளினால், தமிழின் பயன்பாடு அதிகரித்திருப்பதை கண்கூடாகக் கண்டுவருகின்றோம். தமிழ் முரசு பத்திரிக்கையின் விற்பனை கடந்த சில ஆண்டுகளில் உயர்ந்து கொண்டுவருகின்றது. வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை, தமிழ் வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கை – என பல முனைகளில் தமிழின் பயன்பாடு அதிகரித்து வருவதை நாங்கள் அறிந்துள்ளோம்” என்றும் அவர் தனது உரையில் விவரித்தார்.

indranee-rajah-Sing Minister

இந்திராணி ராஜா (கோப்புப் படம்)

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் கருப்பொருளான “உலகமயக் காலகட்டத்தில் தமிழாய்வுக்கு வளம் சேர்த்தல்” காலத்துக்கேற்ற பொருத்தமான ஒன்று என்றும் குறிப்பிட்ட இந்திராணி ராஜா, கால ஓட்டத்தில் தமிழ் மொழி அத்தியாவசியமான ஒன்றாக நிலைபெற நமது அன்றாடப் பயன்பாடுகளில் இடம் பெறுவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என்றும், இணையம், நவீனத் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் தமிழை நிலையாக இடம்பெறச் செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

ஏப்ரல் மாதத்தில் சிங்கையில் தமிழ் மொழி விழா

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் தமிழ் மொழி விழாவை அரசாங்கமே ஏற்று நடத்தியும் தமிழின் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றது என்றும் அவர் மேலும் விவரித்தார்.

வழக்கமாக தமிழ் மாநாடுகளில், நமது தமிழின் பழம் பெருமைகளை மட்டுமே பிரமுகர்கள் பேசுவார்கள். ஆனால், சிங்கை அமைச்சர் இந்திராணி ராஜாவோ, அதையெல்லாம் தொட்டுப் பேசாமல், நவீன உலகில், அதுவும் தமது நாட்டில் தமிழை மேம்படுத்த தாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள், அதில் ஏற்படும் சவால்கள், அந்த சவால்களை தாண்டிவர தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள், இனி அடுத்து செய்ய வேண்டியது என்ன என கட்டம் கட்டமாக, அடுக்கடுக்காக விவரித்தது பேராளர்களைக் கவர்ந்தது.

மாநாட்டுத் தொடக்க விழா முடிந்ததும் பலரும் அவரது உரையின் ஆழத்தையும், சிறப்புகளையும் பற்றியே பேசிக்கொண்டிருந்ததைக் காணவும், கேட்கவும் முடிந்தது.