Home நாடு “பழம் பெருமை மட்டும் பேசாமல் தமிழை முன்னெடுத்துச் செல்வோம்” – மாநாட்டில் கி.வீரமணி அறைகூவல்

“பழம் பெருமை மட்டும் பேசாமல் தமிழை முன்னெடுத்துச் செல்வோம்” – மாநாட்டில் கி.வீரமணி அறைகூவல்

911
0
SHARE
Ad

???????????????????????????????கோலாலம்பூர், பிப்ரவரி 1 – 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் மூன்றாவது நாளான நேற்று தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (படம்) உரையாற்றினார்.

நகைச்சுவையும், தமிழ் உணர்ச்சியும், காலத்திற்கு தேவையான கருத்துகளையும் உள்ளடக்கிய சிறப்பானதொரு உரையை சுமார் ஒரு மணி நேரத்திற்கு அவர் வழங்கி பேராளர்களை மகிழ்வித்தார்.

ஆங்காங்கே பெரியாரின் கருத்துச் சிதறல்களையும் மேற்கோள் காட்டியவர், இன்றைக்கு பரவலாகப் பயன்பாட்டில் இருந்து வரும் கைத்தொலைபேசிகளைப் பற்றி அன்றைக்கே தந்தை பெரியார் எழுதியிருந்ததையும் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

தூரத்தில் உள்ளவர்கள் முகம் பார்த்து பேசும் காலம் வரும் என 60 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய பெரியாரின் தூரநோக்கு சிந்தனையையும் வீரமணி நினைவு கூர்ந்தார்.

சாமிவேலுவுக்குப் பாராட்டு

இந்த மாநாட்டுக்கு நாட்டின் பிரதமரையும் வரவழைத்து, அவரது வாயால் நமது திருக்குறளின் பெருமைகளையும் கூறச் செய்த மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சாமிவேலுவை  வீரமணி வெகுவாகப் பாராட்டினார்.

???????????????????????????????

 

மேடையில் சாமிவேலு, டாக்டர் டி.மாரிமுத்துவுடன் கி.வீரமணி

“நாம் இப்போது இருப்பது மீட்டுருவாக்க காலகட்டம். நாம் இழந்ததை தற்போது மீட்டுக் கொண்டு வந்து சேர்க்கும் காலம் இது. முதுகெலும்புள்ள துணிச்சலான இனம்தான், போராடும் இனம்தான் இறுதிவரை நிலைத்து நிற்கும். எனவே, போராட்ட உணர்வுள்ள தமிழர்களும் இறுதி வரை நிலைத்து நிற்பார்கள்” என்றும் வீரமணி முழங்கினார்.

தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை என்றும் சுட்டிக் காட்டிய வீரமணி இந்த மாநாட்டுக்கு அடித்தளமிட்ட தனிநாயகம் அடிகளாரை நினைவு கூர்ந்து பாராட்டினார். சாதாரண குடும்பத்தில் பிறந்த தனிநாயகம் அடிகளார், ஒரு நாட்டில் பிறந்து, இன்னொரு நாட்டில் தொழில் செய்தாலும், தமிழை மறக்காமல், இந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை உருவாக்கியதை பேராளர்களுக்கு நினைவுபடுத்தினார்.

மீட்டுருவாக்கம் செய்வோம்

உலகின் பல நாடுகளில் தமிழ் மொழியைப் பயில்வது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் கனடா நாட்டில் தமிழில் பட்டப்படிப்பு படிப்பதும் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட வீரமணி, தமிழ் மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்துதான் சமஸ்கிருதமும் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

???????????????????????????????

வீரமணி உரையைக் கேட்கத் திரண்டிருந்த பேராளர்கள்

“நாம் எப்போதும் பழம் பெருமைகளை மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் போதாது ஆக்கபூர்வமாகவும் சிந்திக்க வேண்டும். நமது பெருமைகளை மீட்டுருவாக்கம் செய்யுங்கள். தமிழை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை ஆராயுங்கள்” என்றும் வீரமணி எழுத்தாளர்களையும், ஆய்வாளர்களையும் கேட்டுக் கொண்டார்.

அந்த வகையில் தந்தை பெரியார், அந்த காலத்திலேயே தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை வலியுறுத்தி வந்ததையும் அதனை பெரியார் நூற்றாண்டு விழாவின் போது அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அரசுதான் ஏற்றுக் கொண்டு செயல்படுத்தியது என்றும் வீரமணி நினைவுபடுத்தினார்.

அந்த எழுத்துச் சீர்திருத்தத்தை மலேசியாவிலும் பயன்படுத்த அரசாங்கம் தயங்கியபோது, அப்போது அமைச்சராக இருந்த சாமிவேலுவும், மலேசிய திராவிடர் கழகமும் முன்னின்று போராடி, மலேசியாவிலும் எழுத்துச் சீர்திருத்தத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர் என்ற தகவலையும் தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.

பிள்ளைகளுக்கும் தமிழில் பெயரிடுங்கள் என வலியுறுத்திய வீரமணி, தமிழர்கள் எல்லாம் எது நம்மைப் பிரிக்கிறதோ அதனை ஒதுக்கி வைத்து விட்டு எது நம்மை ஒன்றாக இணைக்கிறதோ அந்த அம்சங்களை மட்டும் வாழ்வில் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.