தோக்கியோ, பிப்ரவரி 1 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் பிணைப் பிடிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது ஜப்பானியரான கெஞ்சி கோத்தோவும் தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நேற்று சனிக்கிழமை வெளியிட்ட காணொளியில் விதித்திருந்த காலக் கெடு முடிவடைந்ததால் கெஞ்சி தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டார் என அறிவித்திருந்தது ஐப்பான் நாட்டிலும், அமெரிக்காவிலும் பெரும் கண்டனத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
படத்தில் இடது புறம் காணப்படுபவர்தான் கெஞ்சி கோத்தோ
இருப்பினும் அந்த காணொளியில் பிணை பிடிக்கப்பட்டிருக்கும் மற்றொரு ஜோர்டான் நாட்டு விமானியின் நிலைமை குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. அவரையும் கொல்லப் போவதாக தீவிரவாதிகள் மிரட்டியிருந்தார்கள்.
வெளியிடப்பட்டுள்ள காணொளியில், முகத்தை மறைக்கும் முழு கறுப்பு நிற அங்கியுடன் காணப்படும் தீவிரவாதிதான் ஏற்கெனவே தலைவெட்டப்பட்ட சம்பவங்களிலும் காட்சியளித்தவன் என ஊடகங்கள் தெரிவித்தன.
கெஞ்சி ஆரஞ்சு வண்ண உடையணிந்திருந்தார். இத்தகைய ஆரஞ்சு வண்ண உடையில்தான் இஸ்லாமியத் தீவிரவாதிகள் அமெரிக்காவால் குவாண்டானாமோ சிறையில் காவலில் வைக்கப்படுகின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டவே இந்த ஆரஞ்சு வண்ண ஆடைகள் பிணைக் கைதிகளுக்கு அணிவிக்கப்படுகின்றன.
காணொளியில் முகமூடியுடன் இருந்த மனிதனுக்கு அருகில் கெஞ்சி மண்டியிட்டு உட்கார்ந்திருக்கின்றார். அவரது கொலைக்கு ஜப்பானிய அரசாங்கம்தான் காரணம் என தீவிரவாதி பிரிட்டிஷ் ஆங்கிலத் தொனியுடன் காணொளியில் கூறியிருந்தான். இனி ஜப்பானிய அரசுக்கு கெட்ட கனவுகாலம் தொடங்குகின்றது என்றும் அவன் கூறுகின்றான்.
தலைவெட்டப்படும் காட்சி அந்த காணொளியில் இடம் பெறாவிட்டாலும், தீவிரவாதிகளின் அறிவிப்புக்குப் பின்னர் அழுகிய வெட்டப்பட்ட தலையுடன் கூடிய ஆரஞ்சு வண்ண உடையணிந்த மனித உடல் ஒன்றை அந்தக் காணொளியில் தீவிரவாதிகள் காட்டியுள்ளனர்.
அந்த உடல் கெஞ்சியின் உடலாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
கெஞ்சி கொலை குறித்த காணொளியைக் கீழே காண்க:
https://www.youtube.com/watch?v=y9k37GSuOfc