Home நாடு தமிழ்க் கணினிக்கு முத்து நெடுமாறன், சிங்கை கோவிந்தசாமி பங்களிப்பு – கி.வீரமணி மாநாட்டில் பாராட்டு

தமிழ்க் கணினிக்கு முத்து நெடுமாறன், சிங்கை கோவிந்தசாமி பங்களிப்பு – கி.வீரமணி மாநாட்டில் பாராட்டு

1538
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 2 – கடந்த நான்கு நாட்களாக சிறப்புடன் நடந்து முடிந்த 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சிறப்புரையாற்றிய தமிழக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பல்வேறு துறைகளில் தமிழை முன்னெடுத்துச் செல்வதில் மலேசியா முன்னணி வகித்து வந்துள்ளது என்றும், குறிப்பாக கணினித் துறையில் தமிழ்மொழி அடுத்த கட்டத்திற்குச் செல்ல மலேசியாவின் முத்து நெடுமாறனும், சிங்கப்பூரின் (காலஞ்சென்ற) நா.கோவிந்தசாமியும் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

மாநாட்டின் மூன்றாம் நாளான சனிக்கிழமை மாலை, பேராளர்கள் அனைவரும் கலந்து கொண்ட பொது அரங்கில் உரையாற்றிய வீரமணி, பழம் பெருமை மட்டும் பேசிக் கொண்டிராமல் தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அனைவரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Veeramani

#TamilSchoolmychoice

மாநாட்டில் உரையாற்றும் வீரமணி 

அந்த வகையில் பல முனைகளில் மலேசியத் தமிழர்கள் தமிழ் மொழியையும், தமிழர் நலனையும் கடந்த காலங்களில் முன்னெடுத்துச் சென்றிருக்கின்றார்கள் என்ற பெருமையையும் பெறுகின்றார்கள் என்றார்.

குறிப்பாக, உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முதன் முதலில் கருக் கொண்டு உருவானதும், நடைபெற்றதும், மலேசியாவில்தான் என்றும் அதற்காக நாம் தனிநாயகம் அடிகளாரைப் போற்ற வேண்டும் என்றும் நினைவுறுத்தினார்.

அதேபோன்று, தமிழ்ப் புத்தாண்டு விவகாரத்தில் முதன் முதலில் தமிழ் நாட்டுக்கு வெளியே அறைகூவல் விடுத்ததிலும் மலேசியாவுக்கு முக்கிய பங்குண்டு என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், மலேசியாவில் அமுல்படுத்தப்பட அரசு சார்பில் சில தயக்கங்கள் இருந்தபோது, அப்போதைய அமைச்சர் சாமிவேலுவும், மலேசிய திராவிடர் கழகமும் அதனை வலியுறுத்தி அமுல்படுத்தப் பாடுபட்டதையும் வீரமணி தெரிவித்தார்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசனத்தோடு தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை முன்மொழிந்து தீவிரமாகப் பின்பற்றி வந்ததை தனது உரையில் நினைவு கூர்ந்த வீரமணி, அதன் காரணமாக இன்றைக்கு கணினியில் தமிழ் மொழி மிகவும் சுலபமாக, சொற்ப தமிழ் எழுத்துருக்களோடு அரங்கேற முடிந்தது என்பதையும் பெருமையுடன் சுட்டிக் காட்டினார்.

Veeramani 9 IATR

கணினித் துறையில் தமிழ் மொழி இன்று இந்த அளவுக்கு முன்னேறியிருப்பதற்கு மலேசியாவின் முத்து நெடுமாறனும், அமரர் சிங்கை நா.கோவிந்தசாமியும் நிறையப் பங்களிப்பு செய்திருக்கின்றனர் என்றும் தமிழ் விசைப் பலகை உருவாக்கத்திலும், விசைப் பலகையை ஒருமுகப் படுத்துவதிலும் அந்த இருவரும் நிறைய பாடுபட்டிருக்கின்றனர் என்றும் தமதுரையில் மீண்டும் குறிப்பிட்டார்.

கணினியில் தமிழ் எழுத்துருக்களின் உருவாக்கத்திற்கும் அவர்கள் இருவரும் நிறைய உழைத்திருக்கின்றனர் என்றும் அவர் பேராளர்களுக்கு நினைவுபடுத்தினார்.

முத்து நெடுமாறன், செல்லியல், செல்லினம் தளங்களின் தொழில் நுட்ப வடிவமைப்பாளரும், ஆலோசகரும் ஆவார். முத்து நெடுமாறன் முரசு அஞ்சல் மென்பொருளை உருவாக்கியவரும் ஆவார்.