கோலாலம்பூர், பிப்ரவரி 2 – நேற்றுடன் நிறைவு பெற்ற 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய இரண்டாவது கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் பின் ஜூசோ தமிழ் மொழி ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் நடத்தப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மலேசிய கல்வி அமைச்சு தொடர்ந்து முழு ஆதரவை வழங்கும் என்று உறுதியளித்தார்.
மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றும் இட்ரிஸ் ஜூசோ
நேற்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசினைப் பிரதிநிதித்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இட்ரிஸ் பின் ஜூசோ இவ்வாறு கூறினார்.
“நாட்டிலுள்ள இந்தியர்களில் 85 விழுக்காட்டினர் தமிழ் மொழியை பேசத் தெரிந்தவர்களாவர். இந்தியர்களில் அதிகமானோர் பேசும் மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பதால் தொலைக்காட்சிகளில் தமிழ்ச் செய்திகள், நிகழ்ச்சிகளையும், 24 மணி நேர தமிழ் வானொலி ஒலிபரப்பையும் அரசு ஏற்பாடு செய்துள்ளது” என்றும் இட்ரிஸ் ஜூசோ மாநாட்டில் தெரிவித்தார்.
தமிழ்நாட்டைத் தவிர்த்து, இந்தியாவிற்கு வெளியே, மலேசியாவில் மட்டுமே 523 தமிழ் ஆரம்பப் பள்ளிகள் அரசாங்கத்தால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது என்ற தகவலையும் இட்ரிஸ் மாநாட்டின் நிறைவு விழாவில் தெரிவித்தார்.
இட்ரிஸ் ஜூசோவுக்கு நினைவுப் பரிசு வழங்கும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சாமிவேலு
மலேசிய கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் தமிழ்ப்பள்ளிகளுக்கு, கல்வி அமைச்சு தொடர்ந்து சிறந்த ஆதரவை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய கல்வி திட்ட வரைவு வாயிலாக அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கப்படும் என்றும் இட்ரிஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ் ஓர் அழகான மொழி மட்டுமல்லாமல், சிறந்த பண்பாட்டையும் கொண்ட மொழியாகும். தமிழ் மொழியும் அதன் பாரம்பரியமும் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மட்டுமின்றி நாட்டின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.
தமிழ் மொழி கற்றல் கற்பித்தல் குறித்த அனைத்து திட்டங்களுக்கும் மலேசிய கல்வி அமைச்சு முழு ஆதரவு வழங்குவதாக அவர் தனது உரையில் கூறினார்.
மாநாட்டு நிறைவு விழாவில் திரளாகக் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்…