கோலாலம்பூர், பிப்ரவரி 2 – நேற்று கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு, மாமன்னர் துங்கு அப்துல் ஹாலிம் முவாட்ஸாம் முன்னிலையில், ஹாங்காங்கில் பிரபல நட்சத்திரமான ஜாக்கி சானுக்கு, மலேசியாவின் உயரிய விருதான டத்தோ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பட்டம் வழங்கும் விழாவில் ஜாக்கிசானின் நிஜப் பெயரான சான் சோங் காங் என்று அறிவிக்கப்பட்டவுடன் அங்கிருந்த பார்வையாளர்கள் மட்டுமின்றி பத்திரிகையாளர்களுக்கும் இன்ப அதிர்ச்சியும், ஆச்சர்யமும் ஏற்பட்டுள்ளது.
முன்வரிசையில் அமர்ந்திருந்த ஜாக்கி சான் மேடைக்கு எழுந்து சென்ற போது, அதை நம்ப முடியாத பலர், “அது ஜாக்கி சான் தானே?” என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அந்த அளவிற்கு ஜாக்கி சான் வருவதும், அவருக்கு டத்தோ பட்டம் வழங்குவதும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அரண்மனையில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கூட ஜாக்கி சான் கலந்து கொள்ளவில்லை என்பது கூடுதல் தகவல்.
(கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோருடன் ஜாக்கி சான்)
பட்டம் பெற்றவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜாக்கி சான், பின்னர் புகைப்படம் எடுக்க ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.
இது குறித்து கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் தனது டிவிட்டர் பதிவில், “ஜாக்கி சானுக்கு மலேசியாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த விருதின் மூலம் மலேசியாவின் புகழையும் குறிப்பாக கோலாலம்பூரின் புகழை உலகமெங்கும் பரப்பலாம். அவர் டத்தோ பட்டம் பெறுவதை நினைத்து நாம் பெருமையடைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அதே பதிவில், ஜாக்கி சானுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அட்னான், “கோலாலம்பூரை மறக்காதீர்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.