Home தொழில் நுட்பம் மலேசியாவில் கணினிகளுக்கு ஆபத்து – பரவுகிறது ‘ரேன்சம்வேர்’

மலேசியாவில் கணினிகளுக்கு ஆபத்து – பரவுகிறது ‘ரேன்சம்வேர்’

565
0
SHARE
Ad

ransomware-100025456-largeகோலாலம்பூர், பிப்ரவரி 2 – மலேசியாவின் சைபர் பாதுகாப்புத் துறையினர் கணினி பயன்பாட்டாளர்களுக்கு மிக முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அது என்னவென்றால், இணையம் மற்றும் கணினி மூலமாக பயனர்களை ஏமாற்றும் தகவல் திருடர்கள் ‘ரேன்சம்வேர்’ (Ransomware) என்ற புதிய மால்வேரை பரப்பி வருவதாகவும், அந்த மால்வேர் நிரல்கள் ஒருமுறை நம் கணினியில் பதிவேற்றம் அடைந்துவிட்டால், அவை ஒட்டுமொத்த கணினி அமைப்பையும் கட்டுப்படுத்தி பயனரின் அனுமதியை தடுத்துவிடும் என்பதாகும்.

அது என்ன ரேன்சம்வேர்?

‘ரேன்சம்’ (Ransom) என்ற ஆங்கில வார்த்தையின் அர்த்தம் பிணைத் தொகை என்று பொருள். நம் கணினியை மீட்க நாம் அந்த மால்வேருக்கு பணம் செலுத்த வேண்டி இருக்கும். அதன் காரணமாகவே அந்த நிரலுக்கு ரேன்சம்வேர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

குறிப்பிட்ட அந்த நிரலால் பாதிப்படைந்துள்ள கணினி, ஒட்டுமொத்தமாக ‘லாக்’ (Lock) செய்யப்பட்டுவிடும். பணம் செலுத்துவதற்காக ஒரு ‘பாப்-அப் மெசேஜ்’ (Pop-up message)மட்டும் கணினியின் திரையில் தோன்றும்.

இது தொடர்பாக மலேசியாவின் சைபர் பாதுகாப்புத் துறையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அமிருதீன் அப்துல் வஹாப்  கூறுகையில், “இந்த ரேன்சம்வேரை உருவாக்கி உள்ள தகவல் திருடர்களின் முக்கிய நோக்கம், பயனர்களிடமிருந்து பணம் பறிப்பது ஒன்றே ஆகும். அந்த மால்வேர் கணினியில், பதிவேற்றம் அடைந்தவுடன், ஒட்டுமொத்த கணிப்பொறி அமைப்பும், அந்த நிரலின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இதனால் பதற்றம் அடையும் பயனர்கள், பாப்-அப் மெசேஜை இயக்கி பணம் செலுத்த முயற்சிப்பர். இதுவே அவர்களின் நோக்கமாகும்” என்று அவர் கூறியுள்ளார்.

இதில் மற்றுமொரு அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல் என்வென்றால், பணம் செலுத்திவிட்டால், அந்த மால்வேர் போய்விடுமா என்றால் இல்லை என்றே அமிருதீன்  கூறியுள்ளார். பாப்-அப் மெசேஜை பயன்படுத்தி, கணினியை இயக்கும் பட்சத்தில் கூடுதலான மால்வேர் கணினியில் நுழைவதை தவிர்க்கமுடியாமல் போய்விடுமாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

மால்வேர்கள் நம் கணினியை தாக்காமல் இருக்க வேண்டுமானால், ஆண்டிவரைஸ் (Antivirus) நிரல்களை நம் கணிப்பொறிகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவை இலவசமாக பெற்ற பைரேட்டட் (Pirated) பதிவு என்றால், தகவல் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லை. எனவே, முறையான ஆண்டிவரைஸ் (Antivirus) மென்பொருளை நம் கணினியில் பயன்படுத்த வேண்டும். அவை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேம்படுத்தப்பட வேண்டும்.

இணைய இணைப்பு உள்ள கணினி என்றால்,  அவை மால்வேர்கள் பரவுவதற்கான வடிகாலாகவே இருக்கும். எனவே, அங்கீகரிக்கப்படாத தளங்களை பயன்படுத்த கூடாது.

ரேன்சம்வேரால் பாதிப்படைந்த கணினியை என்ன செய்ய வேண்டும்?

ரேன்சம்வேரால் பாதிப்படைந்த கணினியை சரி செய்வதற்கு சைபர்999 மையத்தை அழைக்க வேண்டும். தன்னிச்சையாக, அதில் தோன்றும் பாப்-அப் மெசேஜை பின்பற்றி பணம் செலுத்தினால், கணினிப்பொறியின் தகவல்களுக்கு உத்தரவாதம் கிடையாது. இது தொடர்பான தகவல்கள் மலேசிய சைபர் பாதுகாப்புத் துறையின் இணைய தளத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.