Home One Line P1 குடிநுழைவுத் துறையின் அதிரடி நடவடிக்கையால் இணைய மோசடி கும்பலைச் சேர்ந்த 680 சீன நாட்டினர் கைது!

குடிநுழைவுத் துறையின் அதிரடி நடவடிக்கையால் இணைய மோசடி கும்பலைச் சேர்ந்த 680 சீன நாட்டினர் கைது!

961
0
SHARE
Ad
படம்: நன்றி சன் டைய்லி

கோலாலம்பூர்: சைபர்ஜெயாவில் இணைய மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த 680 சீன நாட்டினரை குடிநுழைவுத் துறை நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளதாக குடிநுழைவுத் துறைத் தலைவர் டத்தோ கைருல் டிசைமி டாவுட் தெரிவித்தார்.

சைபர்ஜெயாவில் உள்ள ஒரு கட்டிடத்தின் ஆறாவது மாடியில் குடிநுழைவுத் துறைக் குழு நேற்று காலை 11 மணியளவில் சோதனை நடத்தியது. இது சீனர்களை குறிவைத்து மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த குழு என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

150 குடிநுழைவுத் துறை அதிகாரிகளின் நடவடிக்கையில் கிட்டத்தட்ட  8,230 கைபேசிகள், 174 மடிக்கணினிகள் மற்றும் 787 தனிநபர் கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சந்தேக நபர்களை முற்றுகையிட்ட போது, தப்பிக்கும் முயற்சியில் சிலர் குடிநுழைவுத் துறை அதிகாரிகளைத் தாக்க முற்பட்டதில் அதிகாரிகளுக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாக கைருல் தெரிவித்தார்.

“100 முதல் 120 பேர் தப்பிவிட்டதாக நாங்கள் மதிப்பிடுகிறோம். இதன் விளைவாக சில சீனர்கள் கீறல்கள் மற்றும் சிறிய காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று அவர் இன்று வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அவர்கள் கடந்த ஆறு மாதங்களாக ஒரு மாதத்திற்கு 360,000 ரிங்கிட் வாடகையை செலுத்தி அக்கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது.

603 ஆண்கள் மற்றும் 77 பெண்கள் 14 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் பணமோசடி தடுப்பு சட்டம் 2001 (அம்லா) கீழ் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து சீன தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, சீன நாட்டினரால் நடத்தப்பட்டு வந்ததாக  நம்பப்படும் மிகப்பெரிய இணைய மோசடி குழுவை குடிநுழைவுத் துறை முறியடித்துள்ளதாக குடிநுழைவுத் துறை தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

இந்த திடீர் சோதனையின் போது கிட்டத்தட்ட 1,000 பேர் கைது செய்யப்பட்டதாக அது குறிப்பிட்டிருந்தது.