Home நாடு அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தல் – பழனிவேல் பரிந்துரை சங்கப் பதிவகம் ஒப்புக் கொள்ளுமா?

அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தல் – பழனிவேல் பரிந்துரை சங்கப் பதிவகம் ஒப்புக் கொள்ளுமா?

533
0
SHARE
Ad

பத்து பகாட், பிப்ரவரி 2 – மஇகா விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மஇகாவின் அனைத்து பதவிகளுக்கும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும்  மறுதேர்தல் ஜூன் மாதத்திற்குப் பிறகு நடத்தப்பட வேண்டும் என, தான் பரிந்துரைக்கப் போவதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் கூறியுள்ளார்.

நேற்று பிற்பகல் ஜோகூரில் பத்து பகாட் நகரில் நடைபெற்ற ஜோகூர் மாநில மஇகா தொகுதிகள் மற்றும் கிளைத் தலைவர்கள் சந்திப்புக் கூட்டத்தில் ஜி.பழனிவேல் இதனை அறிவித்தார்.

GP speaking at Johore meeting 1 Feb 2015

#TamilSchoolmychoice

நேற்றைய ஜோகூர் கூட்டத்தில் உரையாற்றும் பழனிவேல்

சங்கப் பதிவகம் ஒப்புக் கொள்ளுமா?

சங்கப் பதிவகத்தின் முடிவுக்கு நேர் எதிரான இந்தப் பரிந்துரையை சங்கப் பதிவகம் ஒப்புக் கொள்ளுமா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.

மறுதேர்தல் நடத்த சங்கப் பதிவகம் விதித்துள்ள 90 நாட்கள் காலக் கெடு முடிவடைய இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், தேவையில்லாமல்,

கட்சி மறுதேர்தல் பிரச்சனையை திசை திருப்பும் விதமாக, எல்லா பதவிகளுக்கும் தேர்தல் என்ற கட்சி சட்டவிதிகளுக்குப் புறம்பான பழனிவேலுவின் அறிவிப்பை சங்கப் பதிவகம் ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

GP arriving Johor meet 1 Feb 2015

நேற்றைய ஜோகூர் கூட்டத்தில் பழனிவேலுவுக்கு வரவேற்பு வழங்கும் கிளைத் தலைவர்கள்

அடுத்த ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தல்களை இந்த ஆண்டு நடத்த, கிளைத் தலைவர்களும், தொகுதித் தலைவர்களும் பலத்த எதிர்ப்புகளை வெளிப்படுத்துவர் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதமர் வேண்டுகோளுக்கு நேர் எதிரான பழனிவேல் நடவடிக்கை

மஇகா நெருக்கடியில் தான் தீர்வு காணும் வரை அனைவரும் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு நேர் எதிராக செயல்படும் வகையில் பழனிவேல், நேற்று ஜோகூரில் மஇகா கிளைத் தலைவர்களைச் சந்தித்தார்.

பழனிவேல் பிரதமரின் வேண்டுகோளுக்கு எதிராக சந்திப்புக் கூட்டம் நடத்தியது ஒருபுறமிருக்க, பிரதமரின் தீர்வு என்ன என்பதை தெரிந்து கொள்ளும் முன்னரே, எல்லாப் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற தான் பரிந்துரைக்கப் போவதாக கூறியுள்ளதும் கட்சியில் சலசலப்பையும் பலத்த கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுமைக்கும் சென்று தான் கிளைத் தலைவர்களைச் சந்திக்கப் போவதாகவும் அவர் அறிவித்திருக்கின்றார்.

ஜோகூர் மாநிலத் தலைவரும்,  கடந்த கட்சித் தேர்தலில் உதவித் தலைவருக்கு வென்றவருமான டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன் நேற்றைய கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

ஏன் முதலில் ஜோகூர் கூட்டம்?

Crowd at GP Johore meeting 1 Feb 2015

நேற்றைய ஜோகூர் பத்து பகாட் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்

நாடு முழுமையிலும் பழனிவேலுவுக்கு எதிர்ப்பான சூழ்நிலை கட்சியில் நிலவி வருகின்றது. 80க்கும் மேற்பட்ட தொகுதித் தலைவர்கள் டாக்டர் சுப்ரா – சரவணன் தலைமையில் அண்மையில் கூடி, சில முடிவுகளை எடுத்திருந்தனர். ஆனால், அந்தக் கூட்டம் சட்டவிரோதமானது என பழனிவேல் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கட்சியில் தனது செல்வாக்கைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பழனிவேல், தனது முதல் கூட்டத்தை ஜோகூரில் நடத்தியிருக்கின்றார்.

காரணம், ஜோகூர் மாநிலத்தில் பாலகிருஷ்ணனுக்கு தனிப்பட்ட, ஒருமுகப்படுத்தப்பட்ட  செல்வாக்கு உண்டு.

அந்த செல்வாக்கின் அடிப்படையில்தான் அவரால் உதவித் தலைவர் தேர்தலிலும் வெல்ல முடிந்தது என்பதால் அவரை முன்னிறுத்தி முதலில் ஜோகூரில் கூட்டம் நடத்தினால்,

சேருகின்ற கூட்டம் பழனிவேலுவுக்கு ஆதரவாக சேர்ந்த கூட்டம் என்பது போன்ற தோற்றம் ஏற்படும் என்பதால்தான் பழனிவேல் முதலில் ஜோகூரைத் தனது பிரச்சாரத்திற்காக தேர்ந்தெடுத்தார் என மஇகா பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

சோதிநாதன், பாலகிருஷ்ணன் பழனிவேல் பக்கம்

ஜோகூர் கூட்டத்தின் மூலம் டத்தோ சோதிநாதனும், டத்தோ பாலகிருஷ்ணனும் பழனிவேல் பக்கம் கட்சியில் சார்ந்து நிற்கின்றனர் என்பது தெளிவாகியுள்ளது.

நேற்றைய கூட்டத்தை பாலகிருஷ்ணன் ஏற்பாடு செய்ய, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு சோதிநாதன் பழனிவேலுவுக்கு ஆதரவாக உரையாற்றினார் என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Sothi speaking at Johore meet 1 Feb 2015

பழனிவேலுவுக்கு ஆதரவாகக் களமிறங்கி நேற்றைய ஜோகூர் பத்து பகாட் கூட்டத்தில் உரையாற்றும் எஸ்.சோதிநாதன்

எனவே, நடந்து கொண்டிருக்கும் கட்சிப் போராட்டத்தில் சோதியும் பாலாவும் பழனிவேல் பக்கம் நிற்கின்றனர்.

சுப்ரா அணியில் சரவணனும், முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர்கள் டி.மோகன், விக்னேஸ்வரன் ஆகியோரும், நடப்பு இளைஞர், மகளிர் பகுதித் தலைவர்களும் ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.

குளுவாங் தொகுதி தலைவர் பழனிவேலுவுக்கு கண்டனம்

இதற்கிடையில், மஇகா மறுதேர்தல் விவகாரம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதால் பிரதமரிடம் இருந்து இதற்கொரு முடிவு வரும் வரை யாரும் எந்தக் கூட்டமும் நடத்தக்கூடாது என்று பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டிருக்கும் டத்தோஸ்ரீ பழனிவேல், தமது வாக்கை தாமே மீறியிருப்பது கண்டனத்திற்குரியது என்று ஜோகூர் மாநிலத்தில் உள்ள, குளுவாங் தொகுதி மஇகா தலைவர் கோ.இராமன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

ஜோகூரில் இக்கூட்டத்தை நடத்தியிருப்பதன் மூலம் பழனிவேல் பிரதமரையே அவமானப்படுத்தியிருக்கிறார் எனவும் கோ.இராமன் விமர்சித்துள்ளார்.

“பிரதமரின் வார்த்தைக்கு கட்டுப்படாத பழனிவேல் மஇகாவையும், சமுதாயத்தையும் வழிநடத்தும் தகுதியை இழந்துவிட்டார் என்றே கருதத் தோன்றுகின்றது. ஜோகூரிலுள்ள 26 தொகுதிகளில் 13 தொகுதிகள் கூட்டத்தில் பங்கேற்காமல் ஒதுங்கி நின்றன” என்றும் இராமன் தெரிவித்துள்ளார்.

பழனிவேல் தமது சொந்த விருப்பத்திற்கேற்ப நடத்தியுள்ள இக்கூட்டத்தில் மஇகாவிற்கு சிறிதும் தொடர்பில்லாத அரசு சாரா இயக்கங்களே அதிகம் கலந்து கொண்டன என்றும் பெரும்பாலான கிளைத் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை என்ற ஒரு கருத்தும் ஜோகூர் மஇகா வட்டாரங்களில் வெளிப்பட்டுள்ளது.