கோலாலம்பூர்: அமெரிக்காவில் பணமோசடி, இணையக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படுவதால் இரண்டு மலேசியர்களை நாடுகடத்துமாறு அமெரிக்க அதிகாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஹுசிர் முகமட் கூறுகையில், சந்தேகநபர்கள் இப்போது சுங்கை புலோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
“சந்தேகநபர்கள் இருவரும் செப்டம்பர் 14- ஆம் தேதி காலை 8.45 மணியளவில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் இருவருமே அமெரிக்காவில் சட்டவிரோதமாக இணைய விளையாட்டுப் பொருட்களை விற்கும் தொழிலில் இருப்பது கண்டறியப்பட்டது.
“சந்தேகத்திற்குரிய இருவருக்கும் செப்டம்பர் 3-ஆம் தேதி அமெரிக்க அதிகாரிகள் ஒப்படைப்பு விண்ணப்பத்தை அனுப்பியுள்ளனர். மேலும் விண்ணப்பத்தை செயல்படுத்த சட்டத்துறை அலுவலகம் ஒப்புக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், பரந்த அளவிலான இணைய ஊடுருவல் முயற்சியில் ஐந்து சீன நாட்டினர்கள் உட்பட இரண்டு மலேசிய வணிகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை புதன்கிழமை தெரிவித்திருந்தது.
ஊடுருவிகளுடன் இரண்டு மலேசிய தொழிலதிபர்களான வோங் ஓங் ஹுவா, 46, மற்றும் லிங் யாங் சிங், 32 ஆகியோரையும் குற்றம் சாட்டியதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தென் கொரியாவில் இணைய விளையாட்டு நிறுவனங்களை குறிவைத்து கணினி ஊடுருவல்களால் இலாபம் பெற இரண்டு உளவாளிகளுடன் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.