வாஷிங்டன்: பரந்த அளவிலான இணைய ஊடுருவல் முயற்சியில் ஐந்து சீன நாட்டினர்கள் மற்றும் இரண்டு மலேசிய வணிகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மென்பொருள் மேம்பாட்டு நிறுவனங்கள், கணினி உற்பத்தியாளர்கள், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள், சமூக ஊடக நிறுவனங்கள், இணைய விளையாட்டு நிறுவனங்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், மற்றும் அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் 100- க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஊடுருவியதாக சீன நாட்டினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக மத்திய வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இம்மாதிரியான ஊடுருவிகள் பெய்ஜிங்கின் சார்பாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டுவதை அமெரிக்க அதிகாரிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், துணை சட்டத்துறைத் தலைவர் ஜெப்ரி ரோசன், சீன அதிகாரிகளின் பொறுப்பற்ற நிலை குறித்த தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.
அவர்கள் இணைய உளவுத்துறையில் கண்மூடித்தனமாக இருப்பதாக அவர் கூறினார்.
” திருட்டுச் செயல்களில் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களை குறிவைக்கும் இணையக் குற்றவாளிகளை எந்தவொரு பொறுப்புள்ள அரசாங்கமும் தெரிந்தே அடைக்கலம் அளிக்காது ” என்று ரோசன் கூறினார்.
வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் இது குறித்து உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், ஊடுருவல் குறித்த குற்றச்சாட்டை பெய்ஜிங் பலமுறை மறுத்துள்ளது.
ஊடுருவிகளுடன் இரண்டு மலேசிய தொழிலதிபர்களான வோங் ஓங் ஹுவா, 46, மற்றும் லிங் யாங் சிங், 32 ஆகியோரையும் குற்றம் சாட்டியதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தென் கொரியாவில் இணைய விளையாட்டு நிறுவனங்களை குறிவைத்து கணினி ஊடுருவல்களால் இலாபம் பெற இரண்டு உளவாளிகளுடன் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.