புது டில்லி: அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) திங்கட்கிழமை இரவு முழுமையான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வியாழக்கிழமை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
ஆகஸ்டு 2-ஆம் தேதி கொவிட்19 தொற்று உள்ளதாக கண்டறிந்த பின்னர், அமித் ஷா மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முழுமையாக குணமடைந்த பின்னர், ஆகஸ்ட் 14 அன்று மருத்துவமனையில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
இருப்பினும், அமைச்சர் ஆகஸ்ட் 17 அன்று ‘கொவிட் பிந்தைய பராமரிப்புக்காக’ மீண்டும் எய்ம்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டு ஆகஸ்ட் 30 அன்று வெளியேற்றப்பட்டார்.
பின்னர், அமித் ஷா மீண்டும் செப்டம்பர் 12-ஆம் தேதி எய்ம்ஸில் மருத்துவர்களின் ஆலோசனையின் படி முழுமையான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு வியாழக்கிழமை வெளியேற்றப்பட்டுள்ளார்.
“மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகஸ்ட் 30-ஆம் தேதி கோவிட் பிந்தைய பராமரிப்புக்குப் பிறகு எய்ம்ஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் இப்போது 1-2 நாட்களுக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்,” என்று மருத்துவமனை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.