Home இந்தியா நிர்மலா சீதாராமன் மீண்டும் நிதியமைச்சர் – அமித் ஷா உள்துறை – மோடியின் ஆதிக்கம் தொடர்கிறது!

நிர்மலா சீதாராமன் மீண்டும் நிதியமைச்சர் – அமித் ஷா உள்துறை – மோடியின் ஆதிக்கம் தொடர்கிறது!

415
0
SHARE
Ad

புதுடில்லி : தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், தெலுகு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடுவும், பீகார் மாநிலத்தின் ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமாரும் முக்கியப் பதவிகள் கேட்கிறார்கள் – இதனால் அமைச்சரவை அமைப்பதில் இழுபறி – என்ற ஆரூடங்கள் எல்லாம் பொய்த்துப் போயின.

மோடியின் அமைச்சரவையில் அவரின் நெருங்கி சகாக்களே மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் வண்ணம் மீண்டும் அதே அமைச்சுப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டனர்.

பாதுகாப்புத் துறை அமைச்சராக ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர், உள்துறை அமைச்சராக அமித் ஷா, நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் ஆகியோர் மீண்டும் அதே அமைச்சுப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருப்பது மோடியின் ஆதிக்கம் இன்னும் புதிய அரசாங்கத்தில் மேலோங்கியிருப்பதையே காட்டுவதாக அமைந்திருக்கிறது.

மோடியின் அமைச்சரவையில் 3 தமிழர்கள்

#TamilSchoolmychoice

ஞாயிற்றுக்கிழமை ஜூன் 9-ஆம் தேதி 3-வது தவணைக்குப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடியின் அமைச்சரவையில் 3 தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர்.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியம் மீண்டும் அதே பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். ஜெய்சங்கர் பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை. குஜராத் மாநிலத்தின் சார்பாக, மாநிலங்களவை (ராஜ்ய சபா) உறுப்பினராகப் பதவி வகிக்கிறார்.

முன்னாள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை. அந்த அளவுக்கு என்னிடம் பணமில்லை என அவர் போட்டியிடாதது குறித்து கூறியிருந்தார். கர்நாடக பிரதேசம் மாநிலத்திலிருந்து அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

நிர்மலா சீதாராமனின் கணவர் பரக்கலா பிரபாகர் தேர்தல் பிரச்சாரக் காலகட்டத்தில் தொடர்ந்து மோடிக்கு எதிரான கருத்துகளை உதிர்த்து வந்தார். தேர்தல் முடிவுகளை ஓரளவுக்குத் துல்லியமாக அவர் கணித்திருந்ததும் அரசியல் பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுத் தேர்தல் முடிந்ததும் மோடி அரசாங்கம் நீண்ட காலத்திற்கு தாக்குப் பிடிக்காது எனக் கூறியிருந்தார் நிர்மலாவின் கணவர் பிரபாகர். எனினும் அந்தக் கருத்துகளைப் புறக்கணித்து மீண்டும் நிர்மலா சீதாராமனுக்கு வாய்ப்பளித்திருக்கிறார் மோடி.

தமிழ் நாட்டிலிருந்து மீண்டும் எல்.முருகன்

எல்.முருகன்

தமிழ் நாட்டின் சார்பாக எல்.முருகன் மீண்டும் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஏற்கனவே, நரேந்திர மோடியின் முந்தைய அமைச்சரவையில் இணை அமைச்சராகப் பதவி வகித்த முருகன், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமிழ்நாடு நீலகிரி தொகுதியில் போட்டியிட்டார். அதே தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் ஆ.ராசா 240,585 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் முருகன் மீண்டும் இணை அமைச்சராக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) நியமிக்கப்பட்டார். அவருக்கு தகவல் ஒலி/ஒளிபரப்புத் துறையும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது.

அவரின் நியமனத்தைத் தொடர்ந்து அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராகத் தொடர்வார் என்பது உறுதியாகியுள்ளது. அடுத்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் வரை அண்ணாமலை தமிழ் நாடு பாஜக தலைவராக வலம் வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதால் அவருக்குப் பதிலாக பாஜ தலைமையை ஏற்கப் போகும் புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

பாஜக நடைமுறைகளின்படி ஒரு தலைவர் அமைச்சுப் பொறுப்பு வகித்தால் அவருக்கு கட்சிப் பொறுப்பு வழங்கப்படுவதில்லை.