Home கலை உலகம் ஆஸ்ட்ரோ விண்மீன் : “செம்மையான சாப்பாடு” கலைஞர்களுடன் நேர்காணல்!

ஆஸ்ட்ரோ விண்மீன் : “செம்மையான சாப்பாடு” கலைஞர்களுடன் நேர்காணல்!

384
0
SHARE
Ad


ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘செம்மையான சாப்பாடு’ சமையல் நிகழ்ச்சியின்  இயக்குநர் – தொகுப்பாளர் – சமையல்காரர் – ஆகியோருடன் நடத்தப்பட்ட நேர்காணல்:

எம். எஸ் பிரேம் நாத், இயக்குநர்:

1. செம்மையான சாப்பாடு நிகழ்ச்சியைப் பற்றிக் கூறுங்கள்.

#TamilSchoolmychoice

எங்களின் நிர்வாகத் தயாரிப்பாளர் ராஜீந்திரன் ராஜமாணிக்கத்தின் சிந்தனையில் உருவானதுதான் செம்மையான சாப்பாடு.

2. செம்மையான சாப்பாடு நிகழ்ச்சியை இயக்கிய உங்களின் குறிப்பிடத்தக்க நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்

நம் குழந்தைகளில் பெரும்பாலானவர்களுக்கு நினைவில் இல்லாத நம் பாரம்பரியச் சமையல் பாத்திரங்களான அம்மிக் கல், இடிக் கல் போன்றவற்றைப் பயன்படுத்தி நம் பாரம்பரியச் சமையல் முறைகளை மீண்டும் உயிர்ப்பிப்பதே செம்மையான சாப்பாடு. இந்த 26 அத்தியாயச் சமையல் நிகழ்ச்சி எந்தவொரு மின் சமையல் சாதனங்களையும் பயன்படுத்தாமல் கிராமியப் பாணியில் படமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை சுவைக்கப் பிரபலங்கள், சாமூக வலைத்தளப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு விருந்தினர்கள் அழைக்கப்பட்டனர்.

சாய் கோகிலா, தொகுப்பாளர் & சமையல்காரர்:

1. உங்களின் பின்னணி மற்றும் உங்களைப் பற்றிய சுவாரசியமான விஷயங்களைப் பற்றி எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

நான் கோகிலா குமாரசாமி, சாய் கோகிலா என்று அன்புடன் அழைக்கப்படுகிறேன். நான் கெடாவில் பிறந்துக் கோலாலம்பூரில் வளர்ந்தேன். 1980-ஆம் ஆண்டு மதிப்பிற்குரிய தஞ்சை கமல் இந்திரன் நடனக் கலைக்கூடத்தில் நான் பாரம்பரிய நடனப் பயிற்சியைத் தொடங்கியபோதுக் கலைத்துறையில் எனது பயணம் தொடங்கியது. கடந்த 10 ஆண்டுகளாகப் பொதுக் காப்பீட்டு நிறுவனத்தில் நிர்வாகியாகப் பணியாற்றியுள்ளேன். நான் 1990 முதல் 1994 வரைப் புகழ்பெற்ற சிட்டி டான்சர்ஸ் குழுவில் உறுப்பினரானேன். அங்கு நான் ஒரு நவீன நடனக் கலைஞரானேன். நாடு முழுவதுமான மேடைகள் மற்றும் தொலைக்காட்சியில் நடனப் படைப்புகளை வழங்கினேன். நாதஸ்வரா மற்றும் நடரியா எனச் சில நிகழ்ச்சிகள் உட்பட, டிவி 3, என்டிவி 7 மற்றும் ஆஸ்ட்ரோ ஆகியவை நான் நடனக் கலைஞராகப் பணியாற்றியச் சில தொலைக்காட்சி நிலையங்களாகும்.

1994-ஆம் ஆண்டில், சபையர் டான்சர்ஸ் (Sapphire Dancers) குழுவை நிறுவியதன் மூலம் நடனம் மற்றும் நடனத் தலைமைத்துவத்திற்கான எனது முயற்சியின் தொடக்கம் ஆரம்பித்தது. முன்பு கோகி டான்சர்ஸ் (Kogi Dancers) என்று அழைக்கப்பட்ட சாஹிபா ஆர்ட்ஸை (Sahibaa Arts) 2006-ஆம் ஆண்டில் நான் நிறுவினேன். அதில் நான் நிறுவனர் மற்றும் நடன இயக்குனராக தொடர்ந்துப் பணியாற்றுகிறேன். கவரும் நிகழ்ச்சிகளால் பார்வையாளர்களை மகிழ்வித்தேன். 2007-இல் ஆஸ்ட்ரோவின் குழந்தைகளுக்கான நடனப் போட்டியான ‘அவதாரம் ஆரம்பம்’-இல் இரண்டாம் இடத்தையும் 2016-இல் ஆஸ்ட்ரோவின் நடனப் போட்டியான ‘யுத்த மேடை’-இன் வெற்றியாளராகவும் முடிசூடப்பட்டதோடு பல பாராட்டுகளை எனது கலைப் பயணத்தில் பெற்றேன்.

இந்தியாவின் சென்னையில் நடந்த எடிசன் விருதுகள் (Edison Awards) மற்றும் ஹைதராபாத்தில் நடந்த எபியு சர்வதேச நடன விழா (ABU International Dance Festival) உள்ளிட்டச் சர்வதேசத் தளங்களுக்குச் சென்று, உலகளாவிய அரங்கில் எனது திறமையை வெளிப்படுத்த எனது கலை முயற்சிகள் உதவின. எனது நடன வேலையைத் தவிர்த்து, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நடிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளேன். எனது முதல் தொலைக்காட்சி நாடகமான ‘அந்த உறவுக்கு சாட்சி இல்லை’ முதல் ‘பியார் பேதுள்’ (Biar Betul) மற்றும் ‘அக்கரை சீமையிலே’ போன்ற சிறந்தத் தயாரிப்புகளில் வகித்த பாத்திரங்கள் வரை, ஒரு நடிகையாக எனது பன்முகத்தன்மையும் ஆழமும் ஒவ்வொரு நடிப்பிலும் பிரகாசமாக வெளிப்பட்டன.

ஆஸ்ட்ரோவில் ‘கள்வனை கண்டுபிடி’, ‘சுப்ரமணி’, ‘மகரந்தம்’ மற்றும் இன்னும் பல தொடர்கள் மற்றும் டெலிமூவிகளில் நடிப்பதன் மூலம் பார்வையாளர்களைத் தொடர்ந்துக் கவர்ந்து வருகிறேன். கலைத்துறையில் எனது அர்ப்பணிப்பு, எனது எல்லையற்றப் படைப்பாற்றல் மற்றும் அசைக்க முடியாத ஆர்வம் போன்றவை மலேசியக் கலைத்துறையில் எனது அந்தஸ்தை உறுதிப்படுத்துகிறது. எனது கலை முயற்சிகளைத் தவிர என்ரிகோஸ் (Enrico’s), ஃபெர்ன்லீஃப் (Fernleaf), போ (Boh), பெட்ரோனாஸ் (Petronas) மற்றும் பலக் குறிப்பிடத்தக்கப் பிராண்டுகளுடன் பணியாற்றி எனது திறமையை வெளிக்கொணர்ந்ததன் மூலம் விளம்பர உலகிலும் எனது முத்திரையைப் பதித்துள்ளேன். எனது பன்முகத் திறமைகள் மற்றும் சிறந்து விளங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பார்வையாளர்களை ஊக்குவித்து, கவர்ந்திழுத்து, கலை உலகில் அழியாத முத்திரையைப் பதித்து வருகிறேன்.

2. செம்மையான சாப்பாடு நிகழ்ச்சியில் உங்கள் மகள்களுடன் சேர்ந்து சமைத்த மற்றும் தொகுத்து வழங்கிய அனுபவம் எப்படி இருந்தது?

என் நான்கு மகள்களுடன் ஒன்றாக ஒரே திரையைப் பகிர்ந்துக் கொண்டது எனக்கு கிடைத்த ஜாக்பாட் என்றுக் கூறுவேன். திரு ராஜீந்திரன் மற்றும் திருமதி நந்தினி கணேசன் அவர்களுக்கு நன்றி.

3. சமையல்காரர் மற்றும் தொகுப்பாளர் என்ற இரண்டு பாத்திரங்களையும் எவ்வாறு நிர்வகித்தீர்கள்?

வீட்டில் சமைப்பதால் அவ்வளவு சிரமமாக இல்லை. தொகுத்து வழங்குவது கொஞ்சம் சவாலாக இருந்தது. ஏனென்றால் எனக்கு அனுபவம் இல்லை. இருப்பினும் எனது திரைக்கதை எழுத்தாளர், லோகனின் உதவியுடன் அதைச் செவ்வெனச் செய்தேன்.

4. உங்களுக்கு எந்தவிதமானச் சமையல் தொழில் சார்ந்தப் பயிற்சியும் இல்லாவிட்டாலும் சமையலில் எப்படி ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

சாப்பிடுவது எனக்கு விருப்பம் மற்றும் என்னை ஓர் உணவு ஆர்வலராகக் கருதுகிறேன். பல்வேறு உணவு வகைகளைச் சமைத்து ஆராய்வதில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். எனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் முழு மனதுடன் பல சுவையான உணவுகளைச் சமைத்துப் பரிமாறச் சமூக ஊடகங்கள் மூலம் சமையல் நுட்பங்கள் மற்றும் உணவு விளக்கக் குறிப்புகளையும் கண்டறிந்தேன்.

5. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உங்களை ஈர்த்தது என்ன?

நிகழ்ச்சியின் தனித்துவமான வடிவம், சமையல் படைப்பாற்றலின் மீதான முக்கியத்துவம் மற்றும் உணவின் மீதான எனது ஆர்வத்தைப் பகிர்ந்துக் கொள்ளும் வாய்ப்பு ஆகியவை இந்தச் சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க என்னை ஈர்த்தது. சமீபத்தியக் காலங்களில் மிகவும் அரிதானப் பழங்காலச் சமையல் முறைகளை நிகழ்ச்சியில் பயன்படுத்தலும் ஒரு முக்கியக் காரணமாகும்.

6. செம்மையான சாப்பாடு நிகழ்ச்சியில் சமைத்த உணவு வகைகளில் உங்களுக்குப் பிடித்த உணவு(கள்) என்ன?

கோழிச் சம்பலுடன் மூங்கில் பிரியாணி.