புதுடில்லி : நாட்டின் முக்கிய தொலைக்காட்சி ஊடகங்கள் எப்போதுமே, பாஜக, மோடி புராணங்களைப் பாடிக் கொண்டிருக்க, பரபரப்பூட்டும், மாறுபட்ட செய்தி கோணங்களை யூடியூப் தளங்களில் நேர்காணல்கள் மூலம் வழங்குவது அரசியல் ஆய்வாளர்கள்தான்!
மோடியின் நெருங்கிய சகாவாகக் கருதப்படுபவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவரின் கணவர் பரக்கலா பிரபாகர் ஒரு பொருளாதார நிபுணர்.
வீட்டில் மனைவியுடன் என்ன பிரச்சனையோ? மனிதர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து தனது நேர்காணல்களின் மூலம் பாஜகவையும் மோடியையும் வெளுத்து வாங்குகிறார். மோடியை சர்வாதிகாரி என்கிறார். சர்வாதிகாரிகள் வரலாற்றில் இரண்டு முடிவுகளைத்தான் சந்திப்பார்கள் – ஒன்று கைகளில் விலங்கு – இன்னொன்று சவப்பெட்டி – அதுதான் மோடிக்கும் நேரும் – என்னும் அளவுக்கு காட்டமாக விமர்சித்து வருகிறார்.
மனைவி நிர்மலாவைப் பற்றி மட்டும் பிரபாகர் ஒன்றும் சொல்வதில்லை. திரும்பவும் வீட்டுக்குத்தானே போகவேண்டும் என்பது காரணமாக இருக்குமோ என்னவோ தெரியவில்லை!
பிரபாகரின் கணிப்பு, பாஜக தனித்து நின்று 200 அல்லது 220 தொகுதிகளை மட்டுமே பெறும் என்பது! அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பியக் கட்சிகள் கூடுதலாக 30 அல்லது 35 தொகுதிகளைப் பெறலாம் என்பதும் அவரின் இன்னொரு கணிப்பு!
எனவே! பாஜக, தனியாகவோ, கூட்டணியாகவோ ஆட்சி அமைக்க முடியாது என்பது அவரின் முடிவு. எப்படியிருப்பினும் தனித்து அதிக இடங்களை வெல்லப் போகும் ஒரே கட்சி பாஜக என்பதையும் அவர் மறுக்கவில்லை.
மோடியின் நிதியமைச்சரின் கணவரே பாஜகவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வருவது சமூக ஊடகங்களில் பலத்த விவாதங்களை எழுப்பியுள்ளது.