பெய்ஜிங், பிப்ரவரி 3 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மே மாதம், சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
4 நாள் பயணமாக சீனா சென்றுள்ள அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் வாங் யி-யுடனான சந்திப்பின் போது இதனை தெரிவித்திருந்தார்.
எனினும், மே மாதம் எந்த தேதியில் மோடி சீனாவிற்கு பயணம் மேற்கொள்வார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இது தொடர்பாக இறுதி முடிவெடுத்து பின்னர் சீன அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்திய குடியரசு தின விழாவிற்கு வருகை தந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன், நரேந்திர மோடி காட்டிய நெருக்கம், சீனா தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சீன அரசு தரப்பில், இது தொடர்பாக எந்தவொரு கருத்துக்களும் இதுவரை தெரிவிக்கப்படாத நிலையில், சீனா ஊடகங்கள் ஒபாமா பயணம் குறித்து இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தன.
அவை சீனத் தலைவர்களின் மனநிலையை எதிரொலிப்பவையாகவே இருந்தன. மே மாதம் நரேந்திர மோடி மேற்கொள்ள இருக்கும் சீனப் பயணம், இந்தியா-சீனா இடையே இருக்கும் மனக் கசப்புகளை சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.