Home நாடு மஇகா: சட்டவிரோதக் கிளைகளினால் எல்லாப் பதவிகளுக்கும் மீண்டும் மறுதேர்தல் – அகமட் சாஹிட் அறிவிப்பு!

மஇகா: சட்டவிரோதக் கிளைகளினால் எல்லாப் பதவிகளுக்கும் மீண்டும் மறுதேர்தல் – அகமட் சாஹிட் அறிவிப்பு!

711
0
SHARE
Ad

MIC-logoபுத்ராஜெயா, பிப்ரவரி 9 – நாடு முழுமையிலும் மஇகாவினரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சங்கப் பதிவகத்தின் இறுதி முடிவினை இன்று இங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் அகமட் ஹாமிடி அறிவித்தார்.

அந்த முடிவின் முக்கிய சாரம்சங்கள் பின்வருமாறு:-

  1. கடந்த 5 டிசம்பர் 2014ஆம் தேதி சங்கப் பதிவகம் வெளியிட்ட கடிதத்தின்படி 23 மத்திய செயலவை, 3 உதவித் தலைவர்கள் பதவிகளுக்கு மறுதேர்தல் நடத்தும்படி உத்தரவிடப்பட்டது.
  2. அதன் பின்னர், 31 டிசம்பர் 2014இல் சங்கப் பதிவகம் தாங்கள் விடுத்துள்ள உத்தரவுகளை மஇகா செயல்படுத்த வேண்டுமென முன் அறிவிப்பு எச்சரிக்கை கடிதம் ஒன்றையும் 1966ஆம் ஆண்டின் சங்கங்களின் சட்டவிதி 16 (1)க்கு ஏற்ப அனுப்பியது.
  3. இதற்கிடையில் பல கிளைகள் 2013இல் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டன என்ற புதிய புகார் ஒன்றையும் சங்கப் பதிவகம் கிடைக்கப் பெற்றது (இந்தப் புகாரை டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும், டத்தோ ரமணனும் சமர்ப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)
  4. இந்தப் புகாரை விசாரித்ததில் இதற்கான அடிப்படை ஆதாரம் இருப்பதை சங்கப் பதிவகம் தனது விசாரணையில் உறுதிப் படுத்தியது. இதனைக் கடுமையாகக் கருதும் சங்கப் பதிவகம், இந்த சட்டவிரோதக் கிளைகளின் காரணமாக, 2013இல் மஇகாவில் எல்லா நிலைகளிலும் நடந்த தேர்தல்கள் செல்லாது என்ற முடிவை எடுத்துள்ளது.
  5. இதன் காரணமாக, எல்லா பதவிகளுக்கும் மீண்டும் மறுதேர்தல் வைப்பதுதான் தற்போது மஇகாவில் எழுந்துள்ள சர்ச்சைக்கெல்லாம் ஒரு சரியான தீர்வாக இருக்கும் என்பதால், எல்லா பதவிகளுக்கும் மீண்டும் தேர்தல் நடத்துவது என சங்கப் பதிவகம் முடிவெடுத்துள்ளது.
  6. அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 2015இல் எல்லா மஇகா கிளைகளுக்கும் மறுதேர்தல் நடைபெறும்.
  7. 2015 மே மாதம் தேசியத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும்
  8. 2015 ஜூன் மாதத்தில் தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடைபெறும்.
  9. இளைஞர், மகளிர் பகுதி, புத்ரா, புத்திரி பிரிவுகள் 2015 ஏப்ரல் மாதம் முதற்கொண்டு ஜூன் மாதம் வரை நடைபெறும்.
  10. இறுதியாக மத்திய செயலவை, தேசியத் துணைத் தலைவர், 3 தேசிய உதவித் தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல்கள் 2015 ஜூலை மாதம் நடைபெறும்.
  11. 2009இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவை இனி அதிகாரபூர்வ மத்திய செயலவையாக, இடைக்கால மத்திய செயலவையாக செயல்படும். இந்த மத்திய செயற்குழுவின் அதிகாரத்தின் நேரடிப் பார்வையின் கீழ் இனி மஇகா தேர்தல்களும், மஇகாவின் இனிவரும் அடுத்த கட்ட நடவடிக்கைகளும், நடைபெறும்.
  12. கட்சியின் தேர்தல்களை நடத்துவதற்கு இனி இந்த மத்திய செயலவை ஒரு புதிய தேர்தல் பொறுப்பாண்மைக் குழுவை நியமிக்கும்.
  13. 2012ஆம் ஆண்டு வரையில் அமைக்கப்பட்ட கிளைகள் மட்டுமே இந்த தேர்தலில் பங்கேற்க முடியும்.
  14. முறையாக அமைக்கப்பட்ட, தகுதி வாய்ந்த கிளைகள் மட்டுமே இந்த தேர்தலில் பங்கேற்க முடியும்.
  15. இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட தேதிகளுக்குள் முறையாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தொகுதிகளுக்கான பட்டியலை மஇகா சங்கப் பதிவகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  16. உள்துறை அமைச்சின் கீழ் உள்ள சங்கப் பதிவகத்தின் இந்த முடிவுகளை மஇகா குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்த முடியவில்லை என்றால், கட்சியின் பதிவு ரத்து செய்யப்படலாம்.
  17. மஇகா உறுப்பினர்களின் நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையில், சங்கப் பதிவகம் மேற்கண்டவாறு எடுத்திருக்கும் முடிவுகள்தான் மஇகாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான சரியான தீர்வாக இருக்கும் என உள்துறை அமைச்சு கருதுகின்றது.

-இவ்வாறு இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹாமிடி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice