கோலாலம்பூர், பிப்ரவரி 9 – நேற்று மதியம் 12.30 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து 371 பயணிகளுடன், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரை நோக்கிப் புறப்பட்ட ஏர் ஆசியா எக்ஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 4 மணி நேரங்கள் வானில் சுற்றிப் பறந்தது.
புறப்பட்ட சில நிமிடங்களில் தானியங்கி உந்துசக்தியில் (auto-thrust problems) கோளாறு இருந்தது கண்டறியப்பட்டதால், அதன் எரிபொருள் தீரும் வரை சுமார் 4 மணி நேரங்கள், மலாக்கா நீரிணைக்கு மேலே பறந்து வட்டமடித்தது.
பின்னர், மாலை 5.40 மணியளவில் மீண்டும் கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தில் அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதனால் சுமார் 4 மணி நேரங்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான பயணிகள் பின்னர் நிம்மதியடைந்தனர்.
வழக்கமாக விமானம் புறப்படும் போது முழு எரிபொருளுடன் செல்லும், ஆனால் தரையிறங்கும் போது எரிபொருள் தீர்ந்து அதன் எடை குறைந்திருக்க வேண்டும். இதன் காரணமாகத் தான் விமானம் மலாக்கா நீரிணைக்கு மேல் எரிபொருள் தீரும் வரை பறந்துள்ளது.
இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் கூறுகையில், “மதியம் 12.20-க்கு புறப்பட்ட விமானம் இரவு 11.15 மணிக்கு சவுதி அரேபியாவை அடைந்திருக்க வேண்டும். ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணம் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றது” என்று தெரிவித்துள்ளார்.
பின்னர், 7.30 மணியளவில் பயணிகள் அனைவரும் வேறு ஒரு விமானத்தில் ஜெட்டா அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து ஏர் ஆசியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி டோனி பெர்னாண்டஸ் கூறுகையில், “இது வழக்கமாக பின்பற்றப்படும் ஒரு பாதுகாப்பு உத்தி தான். விமானம் தொடர்ந்து பயணித்திருக்க தகுதி வாய்ந்ததாகத் தான் இருந்தது. என்றாலும் பாதுகாப்பு கருதி மீண்டும் கோலாலம்பூரில் தரையிறக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 28-ம் தேதி ஏர் ஆசியா QZ8501 விமானம் இந்தோனிசியாவில் ஜாவா கடலில் விழுந்து விபத்திற்குள்ளானதைத் தொடர்ந்து, இது இரண்டாவது சம்பவமாகும்.