இஸ்லாமாபாத், பிப்ரவரி 13 – கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை நடுங்க வைத்த அல்-கொய்தா இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு அடைக்கலம் அளித்திருக்க வாய்ப்புள்ளது என்று அந்த நாட்டின் முன்னாள் உளவாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி, பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த பின்லேடனை, அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அப்போது பாகிஸ்தான் அரசு, பின்லேடன் தங்கள் நாட்டில் பதுங்கியிருந்தது தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஐஎஸ்ஐ உளவு அமைப்பில் பணியாற்றிய லெப்டினென்ட் ஜெனரல் ஆசாத் துரானி, அல்-ஜெசீரா எனும் தோகா தொலைக் காட்சிக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் இது தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்தி உள்ளார்.
அபோதாபாதில் ஐஎஸ்ஐ அமைப்பின் ரகசிய வீட்டில் பின்லேடன் பதுங்கியிருந்தாரா என்று ஆசாத் துரானியிடம் அல்-ஜெசீரா நிருபர் கேள்வி எழுப்பினார்.
அப்போது துரானி அதற்கு சூசகமாக பதிலளித்தார். எனினும் அவரை அறியாமல் அவர் உண்மையை கூறி விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
“பின்லேடன் கொல்லப்பட்ட சமயத்தில் அவர் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தது பற்றி ஐஎஸ்ஐ அமைப்பிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அவர் குறித்து அவ்வளவு எளிதாக தகவல்களை திரட்ட முடியாது.”
“இதற்கு முன்பு ஐஎஸ்ஐ உதவியால் ரம்ஸி யூசுப் உள்ளிட்ட முக்கிய தீவிரவாதிகளை அமெரிக்காவின் சிஐஏ-வினால் பிடிக்க முடிந்தது. அதுபோல பின்லேடனின் இருப்பிடம் குறித்து அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கு தகவல் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை”.
“ஐஎஸ்ஐ அமைப்புதான் தகவல் அளித்திருக்க வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கணிப்பு. உண்மையில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. எவ்வாறாயினும், பின்லேடன் போன்றவர்களை அவ்வளவு எளிதாக காட்டிக் கொடுக்க முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பேட்டியை மேற்கோள்காட்டி அல்-ஜெசீரா தொலைக்காட்சி, பின்லேடனுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு அடைக்கலம் அளித்தது என்று செய்தி வெளியிட்டுள்ளது.