புது டெல்லி, பிப்ரவரி 14 – பேஸ்புக்கின் ‘இண்டெர்நெட்.ஆர்க் செர்வீஸ்’ (Internet.org service) திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கூகுள் தனது ‘ப்ராஜெக்ட் லூன்’ (Project Loon) திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. பலூன்கள் மூலமாக கம்பியில்லா இணைய இணைப்பு (Wireless Internet)-ஐ இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக இந்திய அரசுடன் கூகுள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
இது தொடர்பாக இந்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-
“வெளித் தொடர்புகள் அதிகம் இல்லாத கிராமப் புறங்களிலும், இணைய சேவையை அதிகரிப்பது இன்று இன்றியமையாத ஒன்றாகி வருகின்றது. அதற்கு கூகுள் லூன் போன்ற திட்டங்கள் பேருதவி புரியும் என இந்திய அரசு நம்புகிறது. இந்த திட்டத்தின் மூலம் அதிக உயரத்தில் பறக்கும் பலூன்களைக் கொண்டு 5 மில்லியன் மக்களுக்கு இணைய சேவை வழங்க முடியும். இந்த திட்டத்திற்கு அதிக செலவுகளும் ஆகாது என கணக்கிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூகுள் லூன் திட்டம் முதல் முறையாக 30 பலூன்களைக் கொண்டு நியூசிலாந்தில் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. வானில் சற்றே தொலைவில் பறக்கும் இந்த பலூன்கள் மென்பொருட்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்த திட்டம் மட்டுமல்லாது, மின் பற்றாக்குறையை போக்குவதற்கும் புதிய திட்டம் ஒன்றையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.