ஆனைக்கல், பிப்ரவரி 14 – ஓசூர் அருகே பெங்களூர்- எர்ணாகுளம் இடையே செல்லும் இன்டர்சிட்டி பயணிகள் ரயில் நேற்று காலை தடம் புரண்டதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் 87 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 17 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து கேரளாவின் எர்ணாகுளம் வரையில் செல்கின்ற இன்டர்சிட்டி விரைவு ரயில் நேற்று காலை 6.15 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டது.
தமிழகத்தின் ஓசூர் அருகே உள்ள கர்நாடகா பகுதியான ஆனைக்கல் என்ற இடத்தில் காலை 7.33 மணியளவில் வந்த இந்த ரயில் திடீரென விபத்துக்குள்ளது. இதில் ரயிலின் D8, D9 உட்பட மொத்தம் 9 பெட்டிகள் தடம் புரண்டன.
அப்போது பெட்டிகள் ஒன்றோடு ஒன்று பலமாக மோதின.
இந்த விபத்தில் 12 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 87 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், லேசான காயமடைந்த 70 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தமிழக, கர்நாடகா ரயில்வே அதிகாரிகள் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
தற்போது ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட D8, D9 பெட்டிகளை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இரு மாநிலங்களில் இருந்தும் 15-க்கும் மேற்பட்ட அவசர ஊர்தி வாகனங்கள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
நூற்றுக்கணக்கான மருத்துவர்களும் அங்கு முகாமிட்டுள்ளனர். அரக்கோணம் மற்றும் பெங்களூரில் இருந்து தேசிய பேரிடம் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.
முதலில் ரயில் தடம் புரண்டதற்கு இன்ஜினில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தமது டுவிட்டர் பக்கத்தில், ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த பாறங்கல்லில் மோதியதால் விபத்து நடந்ததாக தெரிவித்துள்ளார்.