போர்ட் ஆப் பிரின்ஸ், பிப்ரவரி 18 – ஹைதி நாட்டில் நடைபெற்ற கலாச்சார திருவிழா பேரணியில், மின்சாரம் தாக்கி 20-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பலியாயினர்.
ஹைதி நாட்டில் ஆண்டு தோறும் பல்வேறு நடன நிகழ்ச்சிகளுடன் கலாச்சார திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்த திருவிழாவில் பல்வேறு நடன கலைஞர்கள் பேரணியாக செல்வது வழக்கம்.
தலைநகர் போர்ட் ஆப்பிரின்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற இந்த திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பேரணியாக வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் பேரணி வந்த டவுன்டவுன் வீதியில் தாழ்வாக தொங்கி கொண்டிருந்த மின்சார கம்பி மீது அவர்கள் பயன்படுத்திய ஊர்தியின் மேற்பகுதி பட்டு மின்சாரம் பாய்ந்ததில் 20 இசைக்கலைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
46 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்து , திருவிழாவை கொண்டாட குவிந்த மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த விபத்து குறித்து அந்நாட்டு அதிபர் மைக்கல் மார்டெலி தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.