Home இந்தியா நரேந்திர மோடியின் கோட் ரூ,4.31 கோடிக்கு ஏலம்!

நரேந்திர மோடியின் கோட் ரூ,4.31 கோடிக்கு ஏலம்!

498
0
SHARE
Ad

modi-dress6சூரத், பிப்ரவரி 21 – பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த சர்ச்சைக்குரிய கோட் பலத்த போட்டிகளுக்குப் பிறகு ரூ.4.31 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த கோட் உள்பட கடந்த 8 மாதங்களில் பிரதமராக தனக்கு பரிசாக வந்த 455 பொருட்களை ஏலம் விட மோடி முடிவு செய்தார்.

இதன் மூலம் கிடைக்கும் தொகையை கங்கை தூய்மைப் பணிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சூரத்தில் இந்த ஏல நிகழ்ச்சி மூன்று நாள்கள் நடந்தது. இதில் ஒபாமாவின் இந்தியப் பயணத்தின்போது மோடி அணிந்திருந்த கோட் அதிகபட்சமாக ரூ.4.31 கோடிக்கு எடுக்கப்பட்டது.

இந்த கரும் நீல நிற கோட்டில் மோடியின் முழு பெயர் இடம்பெற்றிருந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்பட்டது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனமும், விமர்சனமும் செய்தன.

#TamilSchoolmychoice

இதனிடையில் ஏலத்தில் வைக்கப்பட்டிருந்த பொருள்களில் இந்த சர்ச்சைக்குரிய கோட்தான் பலருடைய கவனத்தை ஈர்த்தது. முதல் நாளில் ரூ.11 லட்சத்தில் தொடங்கிய ஏலம், கடைசி நாளில் ரூ.4.31 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது.

கடைசி நாளில் இந்த கோட்டுக்கு பலத்த போட்டி இருந்தது. பலர் போட்டியில் இணைந்ததால் ஏலத் தொகை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே இருந்தது.

அதைத் தொடர்ந்து பலரும் அதிக விலைக்கு ஏலம் கேட்டனர். முதல் நாள் இறுதியில் அதிகபட்சமாக ரூ.1.11 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று முன்தினம், ரூ.1.25 கோடிக்கு தொடங்கிய ஏலம் ரூ.1.48 கோடியுடன் முடிந்தது. இந்த நிலையில் மூன்றாம் நாளான நேற்றும், இந்த கோட்டுக்கு பலர் போட்டியிட்டனர்.

ரூ.1.61 கோடியில் தொடங்கியது ஏலம். அதைத் தொடர்ந்து பலரும் போட்டிப் போட்டு ஏலம் கேட்டு விலையை உயர்த்தினர். இந்த நிலையில் திடீரென ரூ.2 கோடிக்கு மேல் ஏலத் தொகை உயர்ந்தது.

modi-obama-d1-600மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் விபுல் ஷா ரூ.2.05 கோடிக்கும், சூரத் வைர வியாபாரி ஹிதேஷ் படேல் ரூ.2.31 கோடியாக உயர்த்தி கேட்டார். ஏலம் கேட்பதற்கு மாலை 5 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

அதற்கு சற்று முன்பாக அரியானா தொழிலதிபர் ராஜேஷ் ஜெயின் ரூ.2.86 கோடிக்கு ஏலம் கேட்டார். அவரைத் தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் நடத்தும் அவந்தி கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் சார்பில் ரூ.2.95 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டது.

இறுதியில் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரத்தில் ஈடுபடும் தர்மானந்தா வைர நிறுவனம் சார்பில் லால்ஜி படேல் மற்றும் அவருடைய மகன் ஹிதேஷ் படேல் சார்பில் ரூ.4.31 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டது.

மாலை 5 மணியளவில் இதுவே அதிகத் தொகையாக இருந்ததால் அவர்களுக்கு மோடியின் கோட் கிடைத்தது. மோடியின் கோட்டை தனக்கு ஏற்ற வகையில் மாற்றி அணிந்துக் கொண்டு புகைப்படம் எடுத்தக் கொள்ள உள்ளதாகவும், அதன்பிறகு தங்களுடைய நிறுவனத்தின் வரவேற்பு அறையில் பார்வைக்கு வைக்க உள்ளதாகவும் ஏலத்தில் எடுத்த ஹிதேஷ் படேல் தெரிவித்தார்.

இதனிடையில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு சிலர் ரூ.5 கோடிக்கு மேல் விலை கேட்டதாக ஏலத்தை நடத்திய சூரத் மாவட்ட ஆட்சியாளர் ராஜேந்திர குமார் தெரிவித்தார்.