காபூல், பிப்ரவரி 27 – வடமேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தொடர் பனி சரிவுகளில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மலைப்பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக மிகக் கடுமையான பனிப் பொழிவு இருந்து வருகிறது.
காபூல் நகரின் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் பனி சரிவுகளால் அங்கு இருந்த 100-க்கும் அதிகமான வீடுகள் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாகாணத்தின் ஆளுநர் அப்துல் ரஹ்மான் கபிரி கூறுகையில்,“மாகாணத்தின் பெரும்பாலான இடங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளன. முக்கிய சாலைகள் முடங்கிவிட்டதால், மீட்புப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சில மணிநேரங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும்” என்று அவர் கூறியுள்ளார்.
ஆப்கன் ரெட் கிரெசன்ட் கழகத்தின் தலைமை பேரிடர் பொறுப்பாளர் அப்துல் ரஹ்மான் கலந்தரிரியும், பஞ்ச்ஷீர் பலி எண்ணிக்கையை உறுதி செய்துள்ளதுடன் அது அதிகரிக்க கூடும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.