டோக்கியோ, பிப்ரவரி 27 – 2020-ல் அனைத்து சாத்தியக் கூறுகளும் நிறைவேறினால், நமது சாலைகளில் ஓட்டுனர் இல்லாமல் பல கார்கள் நம்மை குறித்த இடங்களுக்கு அழைத்துச் செல்வதை காணமுடியும்.
இதற்கான முயற்சிகளில் கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த முயற்சியில் ஜப்பானைச் சேர்ந்த முன்னணி கார்கள் தயாரிப்பு நிறுவனங்களான ‘டொயோடா’ (Toyota), ‘நிஷான்’ (Nissan) மற்றும் ‘ஹோண்டா’ (Honda) ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவர்களின் கூட்டு முயற்சியில் வெகு விரைவில் தானியங்கிக் கார்கள் வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என அந்நிறுவனங்களின் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கு ஜப்பான் அரசும் பெரும் உதவிகளை செய்து வருவகின்றது. இது குறித்து நிலம் மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“நாங்கள் முன்னணி நிறுவனங்கள் அடங்கிய வர்த்தக கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். அதில் தானியங்கி கார்கள் தயாரிப்பிற்கு அரசின் சார்பாக எந்த அளவிலான உதவிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்க உள்ளோம்” என்று கூறியுள்ளார்.
இந்த வர்த்தகம் கூட்டம் பற்றி உள்நாட்டு பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஜப்பான் அரசு டொயோடா, ஹோண்டா, நிஷான், பானசோனிக் மற்றும் ஹிடாச்சி நிறுவனங்களை இந்த கார்களின் தயாரிப்பிற்காக ஒன்றிணைத்துள்ளது.
மேலும் இந்த திட்டத்தில் டோக்கியோ மற்றும் நகோயா பல்கலைக்கழகங்களும் இணைய உள்ளன” என்று கூறப்பட்டுள்ளது. ஜப்பான் அரசு தானியங்கி கார்கள் தயாரிப்பு விவகாரத்தில் அதிக ஈடுபாடு காட்டுவதற்கு முக்கிய காரணம்,
உலக அளவில் கார்கள் தாயரிப்பில் அமெரிக்க நிறுவனங்களை விட ஜப்பான் நிறுவனங்களே முன்னிலை வகித்து வருகின்றன. ஒருவேளை தானியங்கி கார்கள் தயாரிப்பில் அமெரிக்கா சாதித்துவிட்டால்,
இந்த துறைக்கான பெரு வர்த்தகம் அமெரிக்காவின் கைவசம் சென்றுவிடும். அதன் காரணமாகவே ஜப்பான் பிரதமர் அபே இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.