Home கலை உலகம் திரைவிமர்சனம்: காக்கி சட்டை – சண்டையில கூட கிழியல…

திரைவிமர்சனம்: காக்கி சட்டை – சண்டையில கூட கிழியல…

731
0
SHARE
Ad

hqdefaultபிப்ரவரி 27 – “இது காக்கி சட்டைபொறி பறக்குதே” என்ற பாடலைக் கேட்டுவிட்டு, கஞ்சி போட்ட உடுப்பு மாதிரி, உடம்பில் முறுக்கு ஏறி விறைப்பாக போய் திரையரங்கில் அமர்ந்தால், அட நம்ம வழக்கமான சிவா படம் தான் என்று எண்ணுவீர்கள்.

காரணம், இந்த படத்தில் போலீஸ் உடுப்பு போட்டு வித்தியாசம் காட்டினாலும், சிவகார்த்திகேயன் தனது எதிர்நீச்சல் ஃபார்முலாவை விட்டு வெளியே வரவேயில்லை.

அது என்ன ஃபார்முலா என்று தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் படம் பார்த்து வருபவர்களுக்கு நன்றாகத் தெரியும். இடைவேளை வரை கதாநாயகியின் பின்னால் திரிந்து கொண்டு வருத்தப்படாத வாலிபராக, எதையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் ஹீரோ, இடைவேளைக்கு சில நிமிடங்களுக்கு முன் அவமானப்படுத்தப்படுவார். அதன் பின்னர் படம் முடியும் வரை சிவகார்த்திகேயன் நடிப்பிலும், கதையிலும் அனல் பறக்கும்.

#TamilSchoolmychoice

இந்த படத்திலும் அதே போன்ற ஃபார்முலாவை வைத்து, ஒளிப்பதிவிற்கு சுகுமார் மற்றும் இசைக்கு அனிருத் கூட்டணியுடன் இணைந்து புதுமையாகக் காட்ட முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார்.

அவர் முயற்சி பலித்ததா? தொடர்ந்து அலசுவோம்.

கதை சுருக்கம்

மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை அவர்களின் குடும்பத்தினர் அனுமதியுடன் மற்றவர்களுக்கு தானம் செய்வதை தினமும் நாளிதழ்களில் படித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அதையே தொழிலாக ஒரு கும்பல் செய்து வருகின்றது. அதற்காக நடத்தப்படும் தொடர் கொலைகள். அதை காவல்துறை உயர் அதிகாரிகளே கண்டும் காணாதது போல் இருந்துவிட, சரியாக இடைவேளைக்கு முன் சபதம் எடுத்து அவர்களை முடிவில் ஒழித்துக் கட்டுகிறார் காவலர் மதிமாறன் (சிவகார்த்திகேயன்).

ஆனால் கடைசி வரை இது காமெடிப் படமா? அல்லது ஆக்‌ஷன் படமா? என்ற குழப்பத்திலேயே நம்மை தவிக்க விட்டுவிடுகிறார் இயக்குநர்.

நடிப்பு

kakki21-620x350

சிவகார்த்திகேயன் இந்த படத்திற்காக கொஞ்சம் எடை கூட்டி புதிய தோற்றத்தில் மிகவும் ஸ்டைலிசாக இருக்கிறார். சமீபகால தொடர் வெற்றியால் அவரது மாநிறம் கூட மறைந்து கன்னம் பளபளக்கிறது.

“உங்க ஹாஸ்பிடல்ல டாக்டர் வேலை இருந்தா வாங்கிக் கொடுங்க நல்லா செய்வேங்க” என்று ஸ்ரீதிவ்யாவிடம் அசடு வழிவது, “ஆம்பளங்ககிட்ட என்ன இருக்கோ அப்படியே ஏத்துக்கங்க. அவங்கள மாத்த நெனச்சா உங்கள மாத்திட்டு போய்ட்டே இருப்பாங்க” என்று கோபத்துடன் பஞ்ச் வசனம் பேசுவது என சிவகார்த்திகேயன் நடிப்பில் தூள் கிளப்புகிறார்.

மழையில் நனைந்தபடி முஷ்டி முறுக்கி சிவகார்த்திகேயன் எதிரிகளை அடித்து நொறுக்கும் அந்த ஒரு காட்சியில் மட்டும், “சிவா நீங்க ஒரு ஆக்‌ஷன் ஹீரோ ஆயிட்டீங்க” என்று சொல்ல வைக்கிறது.

ஸ்ரீதிவ்யா அழகான குடும்பப்பாங்கான கதாநாயகி. கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு. அறிமுகமே “என்ன பொண்ணு டா” என்று வாய்பிளக்க வைக்கும் பளீச் அழகு.

“வீட்டுல பிடிக்கலன்னா விலகிப் போவோம். ஆனா ஒரேடியா விட்டுட்டு போயிடமாட்டோம்” என்று உதட்டில் சிறு புன்னகையைப் படற விட்டபடி காதல் காட்சிகளில் ஸ்ரீதிவ்யா அசத்துகிறார்.

வில்லனாக விஜய் ராஸ் என்ற ஹிந்தி நடிகர் நடித்திருக்கிறார். மீண்டும் திரையில் ரகுவரனைப் பார்த்தது போல் இருந்தது. அவ்வளவு அற்புதமான நடிப்பு.

ஆனால், பல கோடிகள் புழங்கும் அவ்வளவு பெரிய குற்றங்களை செய்யும் ஒரு குற்றவாளி, கோமாளித்தனமான மாமாவிடம் பொண்ணுங்களை ஏற்பாடு செய்யச் சொல்வது. அவன் சொல்வதைக் கேட்டு கேரவனில் உல்லாசமாக இருப்பது என ஒரு ஏமாளி வில்லனாக காட்டப்பட்டிருப்பது திரைக்கதையின் மிகப் பெரிய ஓட்டை. அதனால் விஜய் ராஸின் வில்லத்தனம் இறுதிக் காட்சிகளில் சரியாக எடுபடவில்லை.

இவர்களைத் தவிர இமான் அண்ணாச்சி, மயில்சாமி, மனோபாலா ஆகியோரின் காமெடி படத்திற்கு கலகலப்பு சேர்த்து நம்மை ரசிக்க வைக்கின்றது.

“அதிகாரம் முழுசா நம்ம கையில் இல்ல. அதனால தான் இது மாதிரி நல்ல விஷயங்கள கூட கெட்ட வழியில் செய்ய வேண்டி இருக்கு” என காவல்துறை அதிகாரியாக நடிகர் பிரபுவும், தவறுகளை செய்து விட்டு பாவ மன்னிப்பு கேட்கும் டாக்டராக வரும் யோக் ஜேபி குறைவான காட்சிகளில் வந்தாலும், தனித்துவமான நடிப்பால் ஈர்க்கிறார்கள்.

ஒளிப்பதிவு, இசை, வசனம்

kakki-satt

சுகுமாரின் துல்லிய ஒளிப்பதிவு அற்புதம். மழையில் சண்டையிடும் காட்சிகள், பாடல் காட்சிகள் என ஒவ்வொரு ஃபிரேமும் துடைத்து வைத்தது போல் அழகு மின்னுகின்றது.

அனிருத்தின் பின்னணி இசை தான் உண்மையில் அனல் பறக்கிறது. காட்சிகளுக்கு ஏற்ப பின்னணி இசை மிரட்டியிருப்பதோடு, பாடல்களும் இனிமையாக வந்திருக்கின்றன.

பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனங்கள் ஆங்காங்கே சபாஷ் போட வைக்கின்றன.

“அம்மா… வயிறு புல்லா இருக்கு… ஜீரணம் ஆக ஒரு ஃபேண்டா வாங்கிக் கொடுங்கம்மா” பிச்சைக்காரன் கேட்கும் நகைச்சுவை வசனமாகட்டும், உடல் எடை, இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு இவற்றுக்கெல்லாம் அளவு கூறி இதெல்லாம் சரியாக செயல்பட்டால் ஒரு மனிதனின் உடல் உறுப்புகளுக்கான சராசரி விலை 2 கோடி என்று அதிர்ச்சி அடைய வைப்பதாகட்டும் திகில் நாவலைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.

சறுக்கல்கள்

– கடந்த 10 வருடங்களில், ‘சாமி’ விக்ரம், ‘சிங்கம்’ சூர்யா, ‘சத்யம்’ விஷால் வரை பல முன்னணி கதாநாயகர்கள், கொலைகார அரசியல்வாதி எதிரிக்கு சவால்விட்ட அதே மசாலா ஆக்‌ஷன் போலீஸ் கதை. என்ன ‘காக்கி சட்டை’-ல் மூளைச்சாவு பற்றிய விசயம் மட்டும் கொஞ்சம் மாறுபட்டு உள்ளது.

– விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் திரைக்கதையில் சிவகார்த்திகேயன் சாமியார் வேடம் போட்டு மனோபாலாவை ஏமாற்றும் காட்சிகளும், அதற்கு கூறும் மயில்சாமி ப்ளாஷ்பேக்கும் சலிப்பையே ஏற்படுத்துகின்றன.

வில்லன் வீட்டிற்கே சென்று அவனது லேப்டாப்பில் உள்ள தகவல்களை ஹார்ட்டிஸ்கில் திருடி எடுத்துச் செல்வது, அவனது பாணியிலேயே கிளைமாக்சில் கொல்வது என்பதெல்லாம் அதர பழசான காட்சிகள்…

மற்றபடி, காச்சி சட்டை –  நகைச்சுவை கலந்த ஹீரோயிசம் நிறைந்த படம் என்றாலும், சண்டையில் கூட சட்டை கிழியாத அளவிற்கு ஆக்‌ஷன் மேலோட்டமாக சொல்லப்பட்டு நகைச்சுவை தான் மேலோங்கி நிற்கிறது.

-ஃபீனிக்ஸ்தாசன்