விக்டோரியா, மார்ச் 12 – இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகளுடன் உறவை வலுப்படுத்த இந்தியா எப்போதும் விரும்புகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக செஷல்ஸ், மொரீஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, அதன் முதல்கட்டமாக நேற்று செஷல்ஸ் நாட்டிற்கு சென்றடைந்தார். அவரை அந்நாட்டின் அதிபர் ஜேம்ஸ் அலிக்ஸ் மைக்கேல் விமான நிலையம் சென்று நேரில் வரவேற்றார்.
இன்று செஷல்ஸ் அதிபர் ஜேம்ஸ் மைக்கேலுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மோடி, கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் ரேடார் கண்காணிப்பு கருவியையும் இயக்கி வைக்கிறார்.
அதன்பின் இன்று பிற்பகலில் மொரீஷியஸ் நாட்டிற்கு புறப்படும் மோடி, அங்கு அந்நாட்டின் பிரதமர் அனிரூத் ஜக்நாத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், அந்நாட்டின் பாராளுமன்றத்திலும் உரையாற்றுகிறார்.
அதன் பின்னர் எதிர்வரும் 13-ம் தேதி இலங்கை செல்லும் மோடி, அந்நாட்டின் அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். இச்சந்திப்பின்போது, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
முன்னதாக 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணம் பற்றி மோடி கூறுகையில், “இந்திய பெருங்கடலில் உள்ள இலங்கை, செஷல்ஸ் மற்றும் மொரீஷியஸ் ஆகிய அண்டை நாடுகளுக்கான எனது பயணம், அந்நாடுகளுடன் இந்திய உறவை வலுப்படுத்தும்”.
“இது இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பிரதிபலிக்கும் வகையில் அமையும். இந்தியாவின் பாதுகாப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் வட்டார நாடுகளுடன் உறவை வலுப்படுத்துவது மிக அவசியமான ஒன்று. அதை கருத்தில் கொண்டே 3 நாடுகளின் பயணத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.”
“இலங்கை பயணத்தை அனைத்து துறைகளிலும் உறவை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாகக் கருதுகிறேன். இரு நாடுகளிடையே புதிய உறவு மலர நாங்கள் இணைந்து பாடுபடுவோம்” என்று கூறியுள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகளில் சீனா கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இது இந்திய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், அதனை சரி செய்ய மோடி மேற்கூறிய நாடுகளுடன் உறவை வலுப்படுத்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய வட்டாரங்கள் கூறுகின்றன.