இஸ்லாமாபாத், மார்ச் 16 – மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லக்வி விடுதலை தொடர்பாக இந்தியா தெரிவித்த கடும் கண்டனத்தை தொடர்ந்து அவரை மீண்டும் கைது செய்வதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.
கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய 11 தீவிரவாதிகள், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ்மஹால் நட்சத்திர விடுதி, நாரிமன் ஹவுஸ் உள்ளிட்ட 8 இடங்களில் தாக்குதல் நடத்தினர்.
இதில் வெளிநாட்டினர் உட்பட 154 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப், விசாரணையின் போது இந்த தாக்குதல் சம்பவத்திற்கு லக்வி மூளையாக செயல்பட்டதாக தெரிவித்தான்.
அதனைத் தொடர்ந்து இந்தியா, லக்வியை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. அதனை சட்டை செய்யாத பாகிஸ்தான், அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு பயந்து லக்வியை சகல வசதிகளுடன் சிறையில் அடைத்து இருந்தது.
இந்நிலையில், லக்வியை விடுதலை செய்வதற்கான உத்தரவை அந்நாட்டு உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் வழங்கியது. இதற்கு இந்திய அரசு கடுமையான கண்டனத்தை தெரிவித்தது.
இதை தொடர்ந்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம், லக்வியை மேலும் ஒரு மாதத்துக்கு பிடித்து வைத்திருக்கும் உத்தரவை நேற்று பிறப்பித்தது. இது குறித்து பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘பொது ஒழுங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேலும் 30 நாட்களுக்கு லக்வியை தடுத்து வைத்திருக்கும்படி பஞ்சாப் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே லக்வி தொடர்ந்து ராவல்பிண்டி அடியலா சிறையிலேயே அடைக்கப்பட்டு இருப்பார்’’ என்று கூறியுள்ளார்.
இதுபற்றி லக்வியின் வழக்குரைஞர் கூறுகையில், ‘‘இந்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவே பாகிஸ்தான் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து நாங்கள் மீண்டும் உயர் நீதி மன்றத்தில் முறையீடு செய்வோம்’’ என்று கூறியுள்ளார்.