Home அவசியம் படிக்க வேண்டியவை டி.இமான் 2015 மாபெரும் இசை நிகழ்ச்சி – மலேசியக் கலைஞர்களுக்கு மேடையில் பாடும் வாய்ப்பு!

டி.இமான் 2015 மாபெரும் இசை நிகழ்ச்சி – மலேசியக் கலைஞர்களுக்கு மேடையில் பாடும் வாய்ப்பு!

797
0
SHARE
Ad

IMAG2077கோலாலம்பூர், மார்ச் 24 – மலேசியாவின் பிரபல வானொலியான டிஎச்ஆர் ராகாவும், எம்ஜே ஈவெண்ட்ஸ் என்ற நிறுவனமும் இணைந்து, உலகப் புகழ் பெற்ற தென்னிந்திய இசையமைப்பாளர் டி.இமானின் மின் நடன இசை நிகழ்ச்சி (Electro Dance Music Concert) ஒன்றை முதல்முறையாக மலேசியாவில் வரும் மே 2-ம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணியளவில், ஷா ஆலமிலுள்ள ஸ்டேடியம் மலாவாட்டியில் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த இசை நிகழ்ச்சியில் டி.இமான், தனது இசையில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த பாடல்களை மலேசிய ரசிகர்களுக்காக மேடையில் நேரடியாக இசையமைத்து, பாடி மகிழ்விக்கவுள்ளார்.

டி.இமானோடு பிரபல பாடகர்களான ஹரிசரண், ஸ்வேதா மோகன், வந்தனா ஸ்ரீனிவாசன், விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் புகழ் சந்தோஷ், பூஜா, திவாக்கர் ஆகியோரும் பாடவுள்ளனர்.

#TamilSchoolmychoice

டிஎச்ஆர் ராகாவைச் சேர்ந்தவர்களோடு, விஜய் தொலைக்காட்சி புகழ் பாவனாவும் அறிவிப்பாளராக செயல்பட்டு நிகழ்ச்சியை உற்சாகமாக வழி நடத்தவுள்ளார்.

இது தவிர, இந்நிகழ்வில் பிரபல மலேசியக் கலைஞர்கள் முதல் புதியவர்கள் வரை அனைவரும் பங்கு கொள்ளும் வகையில் போட்டிகளும், பாடும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதற்காக பல்வேறு திட்டங்களும் இடப்பட்டுள்ளன.

தென்னிந்திய சினிமாவை நேசிக்கும் மலேசிய ரசிகர்களின் அன்பையும், உறவையும் மேலும் வலுப்படுத்த இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகின்றது. இந்நிகழ்வின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒருபகுதியை மலேசியாவிலுள்ள அனாதை இல்லங்களுக்கும், முதியவர் இல்லங்களுக்கும் வழங்கவும் ஏற்பாட்டுக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

டிஎச்ஆர் பத்திரிகையாளர் சந்திப்பு

IMG_8422

(அறிவிப்பாளர்கள் ஆனந்தா மற்றும் உதயா)

இந்நிகழ்வு குறித்து விளக்கமளிக்க டிஎச்ஆர் வானொலியும், எம்ஜே ஈவெண்ட்ஸ் நிறுவனமும் நேற்று அதிகாரப்பூர்வ செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தன.

இசை நிகழ்ச்சி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு என்பதால், டிஎச்ஆர் ராகாவைச் சேர்ந்த அறிவிப்பாளர் ஜெய் மற்றும் யாஷினி ஆகியோர் இமானின் வெற்றிப் பாடல்களை பாடி செய்தியாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆனந்தாவும், உதயாவும் செய்தியாளர்கள் சந்திப்பை மிகவும் வித்தியாசமாகவும், கலகலப்பாகவும் வழி நடத்தினர்.

IMG_8396

(இமான் பாடல்களைப் பாடும் ஜெய், யாஷினி குழுவினர்)

இந்நிகழ்வில் பேசிய டிஎச்ஆர் வானொலியின் தலைமை நிர்வாகி சுப்ரா வீராசாமி, “டி.இமான் 2015 நிகழ்ச்சியில் டிஎச்ஆர் அதிகாரப்பூர்வ ஊடகப் பங்களிப்பாளர் (Official Media Partner) என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகின்றேன்” என்று தெரிவித்தார்.

மேலும், நிகழ்ச்சி குறித்து டிஎச்ஆர் வானொலி அறிவிப்பாளர்கள் பேசும் காணொளி ஒன்றையும் சுப்ரா ஒளிபரப்பினார்.

IMG_8424

(டிஎச்ஆர் வானொலி தலைமை நிர்வாகி சுப்ரா வீராசாமி)

அதில் பேசிய டிஎச்ஆர் ரேவதி, இந்நிகழ்வில் மலேசியக் கலைஞர்களும் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அதன்படி, 2014-ம் ஆண்டில் வெளிவந்த மிகச் சிறந்த மலேசியப் பாடல்கள் டிஎச்ஆர் ராகா இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மிகச் சிறந்த பாடல்களுக்கு மக்கள் வாக்களித்து, அக்கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று தெரிவித்தார்.

இது தவிர, டி.இமானின் 2015 இசை நிகழ்ச்சியில் பாட மேலும் இரண்டு மலேசியக் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட டிஎச்ஆர் சுரேஷ், இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது திறன்பேசியில் (Smart phone) உள்ள இண்ட்ஸ்டாகிராம் செயலியில் சென்று அதை வீடியோ மோடுக்கு மாற்றி இமானின் பாடல்களில் ஒன்றை 15 நொடிகளுக்கு பாடி #DUETDILM ஹேஷ்டேகில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

பதிவு செய்யப்படும் காணொளிகள் அனைத்தையும் டி இமான் பார்வையிடுவதோடு, அதில் இரண்டு பேரைத் தேர்ந்தெடுத்து மேடையில் பாட வாய்ப்பளிப்பார் என்றும் சுரேஷ் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, டி.இமான் 2015 நிகழ்ச்சியின் முன்னோட்ட காணொளி ஒன்றும் செய்தியாளர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.

கேள்வி நேரம்

IMG_8444

(கேள்வி நேரத்தின் போது ஏற்பாட்டுக்குழுவினர்)

செய்தியாளர்கள் சந்திப்பில் நடைபெற்ற கேள்வி நேரத்தில், நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவினரான டிஎச்ஆர் வானொலியின் தலைமை நிர்வாகி சுப்ரா வீராசாமி, எம்ஜே ஈவெண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த முகமட் ஜோகான் மலாசா, கேடின், ரிஷால், ஜெய் (டிஎச்ஆர்) மற்றும் எஸ்எஸ்ஜி எண்டர்டெயின்மன்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மற்றும் கணேசன், எஸ்எல்வி குரூப் நிறுவனத்தின் தலைவர் சற்குணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் நிகழ்ச்சி மேடையில் பாடப்படும் மலேசியப் பாடல்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த சுப்ரா, கடந்த ஆண்டு சிறந்த மலேசியப் பாடல்களாக டிஎச்ஆர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 20 பாடல்களில் சிறந்த பாடல்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும், அதில் மூன்று பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த கலைஞர்களுக்கு நிகழ்ச்சி மேடையில் பாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

IMG_8439

மேலும், இண்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்படும் 15 நொடிகள் பாடல் போட்டியின் வழியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் குறித்து விளக்கமளித்த எம்ஜே ஈவெண்ட்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் முகமட் ஜோகான், பதிவு செய்யப்படும் 15 வினாடிகள் கொண்ட காணொளிகளில் சிறந்த பாடகர்களை இமானே நேரடியாகத் தேர்ந்தெடுப்பதோடு, நிகழ்ச்சியின் போது நேரடியாக அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு பாடகர்களும் இமான் முன்னிலையில் நிகழ்ச்சி மேடையில் பாடுவார்கள் என்றும் முகமட் குறிப்பிட்டார்.

இந்த போட்டி புதியவர்கள், வளர்ந்து வரும் கலைஞர்கள் என அனைவருக்கும் பொதுவான ஒன்று என்றும், மலேசியர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம் என்றும் முகமட் தெரிவித்தார்.

செய்தி, படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்

டி.இமான் 2015 நிகழ்ச்சியின் முன்னோட்ட காணொளி: