Home கலை உலகம் திரைவிமர்சனம்: “வலியவன்” – வரவேற்கப்பட வேண்டியவன்…

திரைவிமர்சனம்: “வலியவன்” – வரவேற்கப்பட வேண்டியவன்…

740
0
SHARE
Ad

Valiyavan-Movie-Trailer

கோலாலம்பூர், மார்ச் 27 – சூர்யா, விஷால், ஆர்யா, தனுஷ், பரத் வரிசையில் நம்ம ஜெய்யும் ஜிம்முக்கு போய் உடம்பை ஏத்தி சிக்ஸ் பேக்கோடு வந்து நிற்கும் படம் ‘வலியவன்’.

சிக்ஸ் பேக்கோடு ஜெய் நிற்பது போல் வெளியான போஸ்டரைக் கண்டு மிரண்டு போன இளைஞர்கள், படம் பற்றிய பல கற்பனைகளில் மிதந்து கொண்டிருந்த நேரத்தில், படத்தின் நாயகி ஆண்ட்ரியா நடுமுதுகில் நச்சென்று குத்தியிருக்கும் டாட்டூ தெரிய வெளியான படத்தின் முன்னோட்ட பாடல் வீடியோ ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை எகிறச் செய்து தியேட்டர் பக்கம் ஈர்த்தது.

#TamilSchoolmychoice

திரையரங்கு சென்ற ரசிகர்களை படம் ஏமாற்றவில்லை என்றே தோன்றுகின்றது. காரணம் முன்பாதி முழுக்க சிரிக்க வைக்கும் காமெடியும், பின்பாதியில் திடீர் திருப்பத்துடன் கூடிய ஒரு அழகான ஃபிளாஷ்பேக்கும் படத்தை இறுதி வரை ரசனை மாறாமல் கொண்டு செல்கின்றது.

இதற்கு முன் ஜெய் நடித்த ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய எம்.சரவணன், மீண்டும் ஜெய் கூட்டணியில் இப்படத்தை இயக்கியுள்ளார். சூது கவ்வும், தெகிடி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணன், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கதை என்ன?

சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரான ஜெய், சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்யும் ஆண்ட்ரியாவை காதலிக்கிறார்.முதலில் தேடி வந்து காதல் சொன்ன ஆண்ட்ரியா, ஒரு கட்டத்தில் தான் விளையாட்டாக கூறியதாக சொல்லி ஜெய்யை சோகத்தில் தள்ளுகின்றார்.

ஆனாலும், விடாப்பிடியாக தன்னை காதலிக்குமாறு ஜெய் வற்புறுத்த, அதற்கு ஆண்ட்ரியா கோரிக்கை ஒன்றை முன்வைக்கிறார்.அதாவது, ஒலிம்பிக்கில் ஜெயித்த பிரபல பாக்சர் ஒருவரை அடித்தால் தான் காதலிப்பேன் என்கிறார் ஆண்ட்ரியா .

ஜெய் அந்த பாக்சரை அடித்தாரா? ஜெயித்தாரா? போன்ற கேள்விகளுக்கு படத்தின் கிளைமாக்ஸ் பதில் சொல்வதோடு, அதற்காக சொல்லப்படும் காரணம் தான் ‘வலியவன்’ மெசேஜ்.

நடிப்பு

17637_882441588481523_3384310928058520892_n

“ம்…கண்ணு வேர்க்குது” என்று அழுகையை சமாளித்து, காதலியிடம் பல்பு வாங்கும் ஜெய், இந்த படத்திலும் இருக்கிறார் என்றாலும், இரண்டாம் பாதியில் உடம்பை ஏத்தி கொஞ்சம் விறைப்பும் காட்டுகின்றார்.

முதல் பாதியில், ஜெய் தண்ணியடித்து விட்டு அம்மாவுக்கும், முதலாளிக்கும், பள்ளி ஆசியருக்கும் நடுராத்திரியில் போன் போட்டு “தப்பு பண்ணிட்டேன்” என்று அழும் காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.

அவர் அடிக்கும் லூட்டியுடன், ‘பண்ணையாரும் பத்மினியும்’ புகழ் பால சரவணனும் சேர்ந்து கொள்ள இருவர் வரும் காட்சிகள் அனைத்தும் கைதட்டி ரசிக்க வைக்கின்றன.

“சார் … பொதுவா எல்லாருக்கும் பைத்தியம் புடிக்கும். ஆனால் பைத்தியத்துக்கே உங்கள புடிச்சிருக்கு. சரியான லிப்லாக்கு” என்று அப்பாவியாக பால சரவணன் கூறுவதாகட்டும், “நீங்க ஒரு பொண்ணை கரெக்ட் பண்ண கொறஞ்சது அஞ்சு வருசம் ஆகும் சார்” என்று ஜெய்யை கலாய்ப்பதாகட்டும், படத்தின் காமெடிக்கு சரியாகப் பொருந்தியிருக்கின்றார்.

இரண்டாம் பாதியில் அப்படியே தனது நடிப்பையும், தோற்றத்தையும் மாற்றியுள்ள ஜெய், இதற்காக மெனக்கெட்டு உடம்பை ஏற்றி ‘வலியவனாக’ வந்து நிற்கின்றார். அந்த வகையில் ஜெய்யின் முயற்சி பாராட்டப்படவேண்டிய ஒன்று.

Valiyavan-Movie-Stills

பாக்சர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர், பாக்சருக்கான முகவெட்டும், உடம்பையும் கொண்டிருப்பதோடு, புகழின் உச்சியில் இருப்பவர்களின் திமிரையும் மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.

ஆண்ட்ரியா.. அநேகமாக ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்ளும் படியாக ஒரு நல்ல கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

“இந்த காலத்து பசங்க பொண்ணுங்கள கரெக்ட் பண்ண என்ன வேணாலும் பண்ணுவானுங்க, கால்ல விழுவாங்க, மொட்டையடிச்சுக்குவானுங்க, மதம் கூட மாறுவாங்க” என்று வசனம் பேசும் நல்ல பெண்ணாக நடித்திருக்கின்றார். அட நம்புங்கப்பா…

படத்தில் ஜெய்யின் அப்பாக வரும் அழகம் பெருமாள் மற்றும் அம்மாக வரும் அனுபமா குமார் ஆகிய இருவரின் நடிப்பும் வழக்கம் போல் அவ்வளவு அழகு.

குறிப்பாக, குடும்பத்தோடு ஷாப்பிங் சென்று ‘ஹாட் டாக்’ வாங்கும் காட்சி… அங்கு நடக்கும் சம்பவம்…அதில் அழகம் பெருமாளின் நடிப்பு …அடடா…

“நீ சின்ன வயசில அப்படியே ஊர்ந்து போய் நாய் பால குடிச்சிருக்க தெரியுமா?” என்று அனுபமா குமார் ஜெய்யை கலாய்க்கும் காட்சிகளிலும், “மொத தடவ தானே சரி …தண்ணியடிச்சுக்க” என்று மகனுக்கு உற்சாகமளிக்கும் காட்சிகளிலும் நவீன காலத்துக்கு ஏற்ப மாறிப் போன அம்மாக்களின் சாயல் அப்படியே..

ஒளிப்பதிவு, இசை

சப்வே காட்சிகள், மேம்பாலம், விமான நிலையம் என சென்னையை சுற்றியே காட்சிகள் நகர்ந்தாலும் அலுப்பு தட்டவில்லை.பாடல் காட்சிகள் மற்றும் பாக்சிங் காட்சிகள் அனைத்தும் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் பிரமிக்க வைக்கின்றன.

இமானின் பின்னணி இசை அதிருகின்றது. பாடல்களில், “ஆஹா காதல் வந்து”, “ஏலோமியா” பாடல்கள் கேட்கும் இரகம்.

“கைதட்டரவங்களை சாதாரணமா நெனச்சிருராதீங்க…. அவங்க ஸ்டார் ஆக ஆசை படல அவ்வளவு தான்” இப்படியாக ஜெய்யின் வசனத்தோடு படம் முடிகின்றது.

மொத்தத்தில், காதல், காமெடி, செண்டிமெண்ட்ஸ், பாக்சிங் எல்லாம் கலந்து ‘வலியவன்’ சொல்ல வரும் கருத்து என்னவென்றால், “நாம தான் வலிமையானவன். மற்றவர்களெல்லாம் சாதாரணமானவர்கள் என்ற தலைக்கணம் ஒருவனுக்கு வந்துவிடக்கூடாது. அப்படி வந்தால் அவன் அந்த சாதாரணமானவனால் ஒருநாள் தோற்கடிக்கப்படுவான்”.

நல்ல கருத்து தானே?…

அதனால், “வலியவன்” – வரவேற்கப்பட வேண்டியவன்…

– ஃபீனிக்ஸ்தாசன்