கோலாலம்பூர், ஏப்ரல் 3 – கையடக்கக் கணினியை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகின்றோம், விரல் அளவில் கணினியை பயன்படுத்தியதுண்டா? இனி அதனையும் நாம் பயன்படுத்தலாம். நவீன தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றை ஒரே ஒரு ‘டாங்கிள்’ (Dongle) இணைப்பின் மூலம் கணினியாக மாற்றுவதே ‘கூகுள் குரோம்பிட் ‘ (Google Chromebit) ஆகும். இதனை அசுஸ் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் தயாரித்துள்ளது.
இது தொடர்பாக கூகுள் நிறுவனம் கூறுகையில், “ஒரு கேண்டி பார் அளவில் இருக்கும் குரோம்பிட்டை, எத்தகைய மின் திரையுடனும் இணைத்து கணினியாக மாற்றலாம். பள்ளிகள் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கு இது உகந்ததாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டிற்குள் வெளியாகும் இந்த கருவியின் விலை 100 டாலர்களுக்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆள்காட்டி விரல் கணினியைத் தொடர்ந்து விரல் நுனியில் கணினியை கூகுள் அறிமுகப்படுத்தினாலும் ஆச்சரியப்படுத்துவதற்கில்லை.