புதுடெல்லி, ஏப்ரல் 6 – மும்பை ‘இந்து மில்’ வளாகத்தில் அம்பேத்கருக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
‘இந்திய அரசியல் சாசன சிற்பி’ என்று போற்றப்படும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கடந்த 1956–ஆம் ஆண்டு டிசம்பர் 6–ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு மும்பை ‘இந்து மில்’ வளாகத்தில் நடந்தது.
மத்திய ஜவுளித்துறை கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் அந்த நிலத்தில் அம்பேத்கருக்கு நினைவகம் எழுப்ப வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அம்பேத்கருக்கு நினைவகம் அமைக்கும் வகையில் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மத்திய ஜவுளித்துறை, மராட்டிய அரசு மற்றும் தேசிய ஜவுளி கழகம் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
அதன்படி, ‘இந்து மில்’ வளாகத்தில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அம்பேத்கருக்கு நினைவகம் அமைக்கும் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது. இது பற்றி பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் வலைதளத்தில்,
‘‘இன்றைக்கு கையெழுத்தான ஒப்பந்தம், அம்பேத்கர் நினைவகம் தொடர்பாக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பிரச்சனையை தீர்த்து வைத்து விட்டது’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் ஆகியோர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர். இது தவிர, இந்து மில் வளாகத்தில் அம்பேத்கருக்கு அழகான நினைவகம் அமைக்கப்படும் என்று தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்தார்.